தேசிய யோகாசனா சாம்பியன்ஷிப் - மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன யோகா மாணவிகள் சாதனை
முகப்பு > செய்திகள் > தமிழகம்குஜராத்தில் நடந்த தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகளில், சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா புலம் மாணவிகள், பாராட்டும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் தேசிய யோகாசனா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான இரண்டாவது சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன.
இதில் தமிழகம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் உட்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 169 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஐந்து பெண்களுடன் பங்கு பெற்ற தமிழக மகளிர் அணி, இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி, ஒரு நான்காம் இடம் உள்ளிட்டவைகளைப் பெற்று, தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
இதில் காயத்ரி, ரோகினி ஆகியோர், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் யோகா புலம் இளம் கலை யோகா தெரப்பி மாணவிகள். மேலும் தமிழக அணி ஆர்டிஸ்டிக் குழு போட்டிகளிலும் காயத்ரி, ரோகினி ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். ஆர்டிஸ்டிக் ஜோடிகளுக்கான போட்டிகளிலும் காயத்ரியும், ரோகிணியும் நான்காம் இடம் பெற்றனர்.
தமிழக அணியின் பயிற்சியாளர் மற்றும் மேலாளராக முறையே மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா முனைவர் பட்ட ஆய்வாளர்களாகிய எழிலரசி மற்றும் கீதா ஆகியோர் அணியுடன் சென்றிருந்தனர். போட்டிகளின் நடுவராகவும் அவர்கள் பணியாற்றி இருந்தனர்.
விஜயகுமாரி என்கின்ற ஆராய்ச்சி மாணவி, பாண்டிச்சேரி அணியின் மேலாளராகப் பணியாற்றினார். போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேந்தர் ராதாகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கிருத்திகா மற்றும் யோகா புலம் தலைவர் பேராசிரியர் முனைவர் இளங்கோவன் ஆகியோர் வரவேற்று, வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.