“சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் கசப்பாய் இருக்கும் எனில்”.. 4 வருட தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு.பழனியப்பன் விலகல்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் தமிழில் பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
இதேபோல், நட்பே துணை, கள்ளன், மந்திர புன்னகை உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் தற்போது இயக்குநர் அமீரின் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தில் நடிக்கிறார். கடந்த 4 வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இதனிடையே மார்ச் 6-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய கரு. பழனியப்பன் தமது சமூக வலைதளத்தில், “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழிகாட்டி இருக்கிறது..” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமது பதிவில், “தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...! சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது!” என குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் ! என குறிப்பிட்ட கரு. பழனியப்பன், “எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!!” என தெரிவித்துள்ளார்.