'இந்த நேரத்துல விநாயகரை வழிபாட்டால் நம்பிக்கை கிடைக்கும்'... 'தமிழக அரசின் தடையை மீறி இத செய்வோம்'... இந்து முன்னணி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, பொது விழாக்களைத் தவிர்க்கவும், பொது இடங்களில், மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும், பொது இடங்களில், விநாயகர் சிலைகள் அமைக்க, சிலைகள் அமைத்து விழா கொண்டாட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, நீர் நிலைகளில் கரைப்பது போன்ற நிகழ்ச்சிகளை, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை, அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வரும், 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''விநாயகர் சதுர்த்தி விழாவுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தற்போதைய சூழலில், விநாயகர் வழிபாட்டால், பக்தர்களுக்கும், இந்துக்களுக்கும் தைரியமும், நம்பிக்கையும் பிறக்கும். எனவே, நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். அரசு அனுமதிக்கவில்லை என்றாலும், தடையை மீறி இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடுகள் நடத்தப்படும். அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்வது குறித்து நிர்வாகக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்'' எனக் கூறியுள்ளார்.