'பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா'?... 'பெற்றோர் மத்தியில் எழுந்துள்ள கேள்வி'... பள்ளிக் கல்வித்துறை அவசர ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்துப் பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தேர்வைத் தள்ளிவைப்பது தொடர்பாகக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஏற்கெனவே பிளஸ் 2 தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார், ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் அப்போது தேர்வு விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தலைமைச் செயலாளர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பிரதமருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்க புதிய வகைக் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து முந்தைய பள்ளிக் கல்வித்துறை கூட்டத்தின் தொடர்ச்சியாக, அரசின் தலைமைச் செயலாளருடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக 38 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தக் கூட்டத்தின் முடிவில், பிளஸ் 2 பொதுத் தேர்வைத் திட்டமிட்டபடி நடத்துவதா, ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மாணவர்களின் உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம் என்பதால் பொதுத் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.