'இனிமேல் கொசுறுக்கு கூட கறிவேப்பிலை கேட்காதீங்க'?... 'ஐபிஎல் ஏலத்தை போல எகிறிய கறிவேப்பிலை விலை'... ஒரு கிலோ இவ்வளவா?... அதிர்ச்சியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கறிவேப்பிலையின் விலை இந்த அளவிற்கு உயரும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் காய்கறி வாங்கிய பிறகு, இலவசமாக வழங்கப்படுவது கறிவேப்பிலை. அந்த கறிவேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்பது அளப்பரியது. ஆனால் உணவில் சுவையைக் கூட்டுவதற்காக மட்டுமே பலரும் அதை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். எந்த கடையில் அதிகமான கறிவேப்பிலை கொடுக்கிறார்களோ, அந்த கடையில் சென்று வழக்கமாகக் காய்கறி வாங்குபவர்களும் உண்டு.
வியாபார உத்திக்குப் பலரும் கறிவேப்பிலையை ஒரு சாதகமான அம்சமாகவே பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில், கறிவேப்பிலை விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைவாக இருந்தபோது வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கடைகளில் வழங்கிய வியாபாரிகள், தற்போது மூடி மறைத்து வைத்து, கொத்தாக அள்ளிக்கொடுத்த காலம் போய், ஒவ்வொரு இணுக்காக எண்ணிக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
கறிவேப்பிலையின் விலை உயர்வு தினசரி உணவுப் பட்டியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சமையலுக்குக் கறிவேப்பிலையை அள்ளி போட்ட காலம் போய் தற்போது கிள்ளி போடும் நிலைக்குப் பல வீடுகள் தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற காய்கறி வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்தே இருக்கிறது. அதிலும் சாம்பார் வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.130 வரை விற்பனை ஆனது. சில்லறைக் கடைகளில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, முருங்கைக்காய் விலையும் சதம் அடித்து இருக்கிறது. ஒரு கிலோ ரூ.110 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்டது.
வரத்துக் குறைவு காரணமாக இந்த காய்கறி வகைகளின் விலை உயர்வு ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், சில வியாபாரிகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பால் வாடகையும் உயர்ந்து, அதன் தாக்கமும் இதில் ஏற்படுகிறது எனவும் கூறுகிறார்கள்.