'தூக்க கூட முடியல, திருடினது அவ்ளோ வெயிட்...' 'ஏரியாவ நெருங்குறப்போ ஆள் எஸ்கேப்...' ஆனா உள்ள இருந்த காதலி...' - பதறவைக்கும் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தியாகராய நகர், மூசா தெருவில் மொத்தமாகத் தங்க நகைகளை வியாபாரம் செய்யும் ஜுவல்லரி உள்ளது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஜூவல்லரியை ராஜேந்திரகுமார், தருண், பரிஸ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். 20-ம் தேதி இரவு ஜூவல்லரியைப் பூட்டிவிட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். இந்த நிலையில், 21-ம் தேதி அன்று காலையில் கடையைத் திறக்க ஊழியர்கள் வந்தபோது, கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே இருந்த தங்க நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பொருள்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த ஜூவல்லரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிர ஆய்வு செய்தனர்.

சிசிடிவியில் பார்த்தபோது 20-ஆம் தேதி இரவு ஜூவல்லரியின் பின்பக்கத்தில் உள்ள தெருவுக்கு பைக்கில் இருவர் வருகின்றனர். பைக்கை விட்டு இறங்கிய ஒருவர், அதே தெருவில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறார். பைக்கில் வந்த நபர் மட்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. பைக்கை விட்டு இறங்கிய நபர், ஜூவல்லரியின் பின்பக்க மதில் சுவரில் ஏறிக் குதித்து கிரில் கேட்டை உடைக்கிறார். உள்ளே நுழைந்த பின்னர் சற்று நேரத்திற்கு பின் ஒரு பெரிய மூடையை சுமக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வெளியில் செல்வது பதிவாகி உள்ளது. இந்தச் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையிலும் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர் பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் கேள்விபட்ட உடனே , உதவி கமிஷனர் மகிமைவீரன் தலைமையில் போலீசார், அங்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மேலும் போலீசார் அந்த வீட்டில் நுழைந்தபோது உள்ளே பெண் ஒருவர் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரின் காதலி எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர் அளித்த தகவலின் மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்கிற `மார்க்கெட்’ சுரேஷ் என்பவரை காவல் துறையினர் உடனடியாக பிடித்தனர். இவர் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது ஏற்கனவே நிலுவையில் நிறைய குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. பூட்டுக்களை உடைப்பத்தில் இவர் கில்லாடியாக இருந்துள்ளார்.
சுரேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட சில நகைகளை உடனடியாக மீட்டுள்ளனர். சுரேசுடன் கூட வந்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவரையும் பிடித்தால் தான் கொள்ளையடிக்கப்பட்ட முழு நகைகள், வெள்ளிப் பொருள்களை மீட்க முடியும் என தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
