மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. நெகிழ்ச்சியான அறிக்கை வெளியிட்டு அஞ்சலி செலுத்திய அண்ணாமலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![BJP Leader Annamalai Statement Regarding Temple Elephant Demise BJP Leader Annamalai Statement Regarding Temple Elephant Demise](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/bjp-leader-annamalai-statement-regarding-temple-elephant-demise.jpeg)
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று காலை மரணமடைந்துள்ளது.
பிரபலமான புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்த போது தனியார் நிறுவனம் மூலம் ஐந்து வயதான லட்சுமி என்ற பெண் யானை விநாயகர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது.
மணக்குள விநாயகர் கோயில் வளாகத்திலேயே லட்சுமி யானை ஓய்வெடுத்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் இந்த லட்சுமி யானை 48 நாள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை நடைப்பயிற்சியின் போது கல்வே கல்லூரி அருகே சென்ற போது மயங்கி விழுந்த யானை அங்கேயே உயிரிழந்தது என கூறப்படுகிறது.
யானையின் மரணத்தால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. யானையின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானையின் உடல் வனத்துறைதக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, "புதுச்சேரியில் மணக்குள விநாயகரின் மறு வடிவாக, நம்பிக்கையுடன் நாடிவரும் பக்தர்களை தும்பிக்கையால் ஆசீர்வதித்து வாழ்த்திய லட்சுமியை இழந்து விட்டோம் என்ற செய்தி மிகுந்த மனக்கவலை அளித்தது.
திருக்கோவில் வாசலில், ஒரு ஐந்தறிவு பிராணியாக இல்லாமல், ஐம்புலனையும் அடக்கிய ஞானி ஆக, தன் அன்பான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்த லட்சுமி வெறும் யானையாக மட்டுமின்றி புதுச்சேரியின் அடையாளச் சின்னமாக திகழ்ந்தது.
சமீபத்தில் நான் புதுச்சேரி சென்ற போது, லட்சுமியிடம் ஆசி பெற்றதும், அருகில் நின்று அன்பு பெற்றதும், என் விழிகளில் இருக்கிறது இன்னும் ஈரமாக... சென்று வாருங்கள் லட்சுமி. எப்பொழுதும் உங்களை மறக்க மாட்டோம்." என நெகிழ்ச்சியான அறிக்கை வெளியிட்டு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
Also Read | நடைப்பயிற்சியில் திடீரென மயங்கி விழுந்து மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. கதறி அழுத பக்தர்கள்!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)