பிரபல முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மறைவு.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் முர்ரே தனது 72 வயதில் மறைந்தது, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிக சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் எவர்டென் வீக்கெஸின் மகன் தான் டேவிட் அந்தோணி முர்ரே.
1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய டேவிட் முர்ரே, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கண்ட சிறந்த விக்கெட் கீப்பர் என பெயர் எடுத்த டேவிட் முர்ரே, போதை பழக்கத்திற்கு அதிகம் அடிமையானதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பழக்கம் காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளான டேவிட் முர்ரே, 1975- 76 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் மீண்டும் சில காரணத்தின் பெயரில் விளையாட அனுமதிக்கப்பட்டு வந்தார் டேவிட் முர்ரே. 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது டேவிட் முர்ரே சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.
அப்படி ஒரு சூழலில் 1983 ஆம் ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 10 ஒரு நாள் போட்டிகள் வரை ஆடியுள்ள டேவிட் முர்ரே, ஆதிக்கம் நிறைந்த சிறந்த விக்கெட் கீப்பராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், பிரிட்ஜ்டவுனில் தனது வீட்டின் முன்பு டேவிட் முர்ரே மயங்கி விழுந்து காலமானதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் டேவிட் முர்ரேவின் மறைவுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
டேவிட் முர்ரேவின் மகனான ரிக்கி ஹொய்டியும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விக்கெட் கீப்பராக 1990களில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.