“எல்லாத்துக்கும் நீங்கள் தான் அக்கா காரணம்”! நெகிழ்ச்சியடைந்த கோமதி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 29, 2019 12:13 PM
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பலர் உந்துதலாக இருந்த போதிலும் பிரான்சிஸ் மேரி என்பவர் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளார்.
தங்க மங்கை கோமதி “எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் அக்கா காரணம்” என்று அழுது கொண்டே தொலைபேசியில் பேசியபோது மறுமுனையில் “உனது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் இது” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியவர் தான் பாப்பாத்தி அக்கா என்று கோமதியால் அழைக்கப்படும் பிரான்சிஸ் மேரி.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த பிரான்ஸ் மேரி தற்போது இவர் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு கோமதி கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது தடகள போட்டியில் சக போட்டியாளராக பிரான்ஸ் மேரி பங்கேற்றுள்ளார். அன்று முதல் கோமதியும், பிரான்ஸ் மேரியும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கோமதிக்கு மிகவும் உந்துதலாக இருந்து வருபவர்தான் பிரான்சிஸ் மேரி. இவருக்கும் தடகள போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் சில காரணங்களால் அவருடைய கனவு கனவாகவே மாறிப்போனது.
இதனையடுத்து, தன்னைப்போலவே கோமதியின் கனவும் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக கோமதியின் தந்தை மற்றும் பயிற்சியாளர் இறந்த பின்னர் கோமதியை மிகவும் பாசமாக அரவணைத்து கொண்டு அவருடைய வெற்றிக்காக மிகவும் பாடுப்பட்டவர்தான் பிரான்சிஸ் மேரி.
இந்நிலையில், அவருடைய மந்திரச் சொற்களே தனது வெற்றி இலக்கை எட்ட வைத்துள்ளது என்று தங்க மங்கை கோமதி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.