"ஐபிஎல் ஆடுறதுக்காக கல்யாணத்தையே மாத்தி வெச்சுட்டாரு.." இளம் வீரர் எடுத்த முடிவு.. வெளியான சுவாரஸ்ய தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (27.05.2022) இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

முன்னதாக, பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்த எலிமினேட்டர் போட்டி, முழுக்க முழுக்க விறுவிறுப்பு நிறைந்த படி இருந்தது.
இறுதியில், பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.
ராஜத் படிதாரை பாராட்டும் பிரபலங்கள்
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், சீனியர் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், இளம் வீரர் ராஜத் படிதார் தனியாளாக நின்று, சதமடித்து அசத்தி இருந்தார். அவருடன் தினேஷ் கார்த்திக்கும் கைகோர்க்க, இருவருமாக இணைந்து 207 ரன்கள் எட்ட உதவினர். இதன் பின்னர் ஆடிய லக்னோ அணி, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றியை பெற்றிருந்தது. ராஜத் படிதார் ஆட்டத்திற்கு, பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.
மாற்று வீரராக வந்த ராஜத்
இதனிடையே, இளம் வீரர் ராஜத் படிதார் ஐபிஎல் போட்டியில் ஆட வந்ததற்கு பின்னுள்ள சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த சீசனில், பெங்களூர் அணிக்காக ஆடி இருந்த ராஜத் படிதார், பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. இதன் காரணமாக, ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணிகளும் எடுக்க முன் வரவில்லை.
இதன் பின்னர், பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த லுவ்னித் சிசோடியா என்ற வீரர் காயம் காரணமாக விலகியதால், அவருக்கான மாற்று வீரராக மீண்டும் பெங்களூர் அணியில் இணைந்தார் ராஜத் படிதார். தொடர்ந்து, பிளே ஆப் போட்டியில் சதமடித்தும் அசத்தி உள்ளார் அவர். இந்நிலையில் தான், பெங்களூர் அணியில் மீண்டும் இணைய அழைப்பு வந்ததன் பெயரில், திருமணத்தையே தள்ளி போட்டுள்ளார் படிதார்.
கல்யாணத்த தள்ளி வெச்சுட்டாரு
இதுகுறித்து அவரின் தந்தை பேசுகையில், "ராஜத் படிதாருக்கு மே 9 ஆம் தேதியன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மிக வேண்டப்பட்டவர்களை மட்டுமே அழைத்து, இந்தூர் பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் புக் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தோம். குறைந்த நபர்களை மட்டுமே அழைத்திருந்ததால், திருமண அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. திருமணத்திற்கான ஹோட்டல் மட்டும் தான் புக் செய்திருந்தோம்.
அப்படி இருக்கையில், பெங்களூர் அணிக்காக ஆட அழைப்பு வந்ததும் திருமணத்தை தள்ளி வைத்தோம். ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, ரஞ்சி தொடரும் இருப்பதால், ஜூலை மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்" என ராஜத் படிதாரின் தந்தை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
