"கான்வே வேண்டாம்.. பேசாம ஓப்பனிங் இவரை இறக்கி விடுங்க".. CSK அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக யாரை களமிறக்கலாம் என இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இன்னும் சில தினங்களில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இதில் சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக யார் விளையாடுவது என சிஎஸ்கே அணியில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘டு பிளிசிஸ் பதிலாக சிஎஸ்கே அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள டெவோன் கான்வே சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகள் மும்பை வான்கடே, புனே ஆகிய மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்த மைதானங்களில் ஆடுவதற்கு டெவோன் கான்வேவை காட்டிலும் ராபின் உத்தப்பாவே சிறந்தவர்.
உத்தப்பா மிகச்சிறந்த தொடக்க வீரர். டெவோன் கான்வேவை களமிறக்காமல் உத்தப்பாவை ஓபனிங்கில் இறக்கிவிட்டால், இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்ஷனாவை விளையாட வைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆடம் மில்னே, மொயின் அலி மற்றும் பிராவோ ஆகிய மூவரும் கண்டிப்பாக ஆடுவார்கள் என்றே நினைக்கிறேன். டெவோன் கான்வே அணிக்கு தேவைப்படவில்லை என்றால், மஹீஷ் தீக்ஷனாவை நான்காவது வெளிநாட்டு வீரராக ஆடவைக்க முடியும்’ என இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.