'ஆஹா... 'இது'க்குள்ள இவ்ளோ 'அர்த்தம்' ஒளிஞ்சிருக்கா!'.. அன்றே சொன்ன தல தோனி!.. சிஎஸ்கே-வின் அதிரடி திட்டம்... வீரர்கள் ஷாக்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளால் துவண்டது சிஎஸ்கே அணி. அப்போது கேப்டன் தோனி கோர் டீமை மட்டும், அதாவது முக்கிய வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு முற்றிலும் புதிய அணியை உருவாக்க உள்ளோம் என்றார்.
அதன் அர்த்தம் அப்போது பலருக்கும் புரியவில்லை. ஆனால், தற்போது பிசிசிஐயின் 2021 ஐபிஎல் தொடருக்கான அதிரடி திட்டம் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் திட்டமும் அதை ஒட்டியே அமைந்துள்ளதாக தெரிகிறது.
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் பாதியில் மிக மோசமாக செயல்பட்டது. பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் கடைசி மூன்று போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
தோல்விகளால் சிஎஸ்கே அணியை பெரிய அளவில் மாற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது.
அடுத்த ஆண்டில் சிஎஸ்கே அணியில் மாற்றம் செய்தாலும் தோனி தான் கேப்டன் என உறுதியாக அணி நிர்வாகம் கூறி உள்ளது. தோனியும் அடுத்த ஆண்டு தான் கண்டிப்பாக சிஎஸ்கே அணியின் ஆடுவேன் என உறுதி அளித்து இருக்கிறார்.
அடுத்த சீசனுக்கான திட்டம் குறித்து தோனி பேசுகையில், கோர் டீமை மட்டும் வைத்துக் கொண்டு சிஎஸ்கே அணியை முற்றிலும் மாற்ற இருக்கிறோம் என்றார்.
முக்கிய வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை நீக்கினால் புதிய வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
வருடாவருடம் நடக்கும் சாதாரண ஏலத்தில் அதிக வீரர்களை வாங்க முடியாது. நல்ல வீரர்கள் ஏற்கனவே பல அணிகளில் இடம் பெற்று இருப்பார்கள்.
ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மெகா ஏலத்தில் எந்த வீரருக்கு வேண்டுமானாலும் குறி வைத்து வாங்கலாம்.
2021 ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு மாதத்தில் நடைபெற இருப்பதால், மெகா ஏலம் நடைபெற வாய்ப்பே இல்லை என முதலில் கூறப்பட்டது. அதனால், தோனி சாதாரண ஏலத்தை வைத்து அணியை சிறிய அளவில் மாற்ற இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால், தற்போது பிசிசிஐ மெகா ஏலத்தை நடத்த உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2020 ஐபிஎல் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அடுத்த சீசனை பெரிதாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தோனி கூறியதன் அர்த்தம் முழு அணியையும் மாற்றுவது தான் என உறுதி ஆகி உள்ளது.
தோனி மெகா ஏலம் நடக்க உள்ளதை அறிந்தே முன்பே அணியை முற்றிலும் மாற்றுவது பற்றி பேசி இருக்கிறார் எனும் முடிவுக்கு வர வேண்டி உள்ளது. பிசிசிஐ மெகா ஏலம் பற்றி ஐபிஎல் அணிகளுக்கு முன்பே தெரிவித்து இருக்கக் கூடும்.
தற்போது தோனி கூறியது போல அணியில் சில வீரர்களை மட்டுமே தக்க வைத்து மொத்த அணியையும் அவர் மாற்றக் கூடும்.
தோனி, ஜடேஜா, தீபக் சாஹர், சாம் கர்ரன், ருத்துராஜ் கெயிக்வாட், பிராவோ என சில வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி தக்க வைக்கும் அல்லது மீண்டும் ஏலத்தில் வாங்கும். மற்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
அதே போல, அடுத்த ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்கள் மற்றும் நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி குறி வைத்து வாங்கக் கூடும்.
அதைக் குறித்து தான் தோனி அணியை முற்றிலும் மாற்ற உள்ளதாக கூறி இருக்கிறார். மெகா ஏலம் திடீரென நடக்க உள்ளதாக தற்போது பிசிசிஐ வட்டாரம் கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
பிசிசிஐ விரைவில் 9வது ஐபிஎல் அணியை அறிமுகம் செய்ய உள்ளது. அதனால், மெகா ஏலம் நடந்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.