பட்டப்பகல்.. பரபரப்பாக இயங்கிய ஹோட்டல்.. "ஆசீர்வாதம் வாங்குற மாதிரி போய்.." பிரபல வாஸ்து நிபுணருக்கு நேர்ந்த கொடூரம்.. பதற வைத்த வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல வாஸ்து நிபுணரான சந்திரசேகர் குருஜிக்கு, கர்நாடகாவில் அமைந்துள்ள ஹோட்டலில் வைத்து, பட்டப்பகலில் நடந்த சம்பவம் ஒன்று, பலரையும் பீதி அடைய செய்துள்ளது.
வாஸ்து நிபுணரான சந்திரசேகர் குருஜி ஒப்பந்தக்காரராக தன்னுடைய தொழிலை தொடங்கினார். தொடர்ந்து, வாஸ்து குருஜியாகவும் அறியப்பட்டார்.
கர்நாடகாவில், தொலைக்காட்சிகளில் கூட வாஸ்து தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றியுள்ள சந்திரசேகர் குருஜி, ஹுபள்ளி என்னும் பகுதியிலுள்ள ஹோட்டலில் இருக்கும் போது, அங்கே வைத்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிர வைத்த சிசிடிவி காட்சி
மிகவும் பரபரப்பான ஒரு ஹோட்டலுக்கு மத்தியில், அதிகம் ஆட்களும் நிறைந்திருந்த பகல் நேரத்தில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது, பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அப்படி வெளியான காட்சிகளின் படி, ஹோட்டலில் அதிக ஆள் நடமாட்டம் உள்ளது.
அங்குள்ள சோபா ஒன்றில், இருவர் காத்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் சந்திரசேகர் குருஜி அங்கே வருகிறார். அவர்கள் இருவரும் எழுந்து சென்று, குருஜியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை போல, விழுந்து வணங்கிய மறு நொடியே தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தினை எடுத்து, சந்திரசேகரை சரமாரியாக தாக்க ஆரம்பிக்கின்றனர். இதன் காரணமாக, ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்த பிறகும், அவர்கள் விடாமல் குத்திக் கொண்டே இருக்கின்றனர். அருகே இருந்தவர்கள் தடுக்க முயற்சித்தும் அவர்களையும் ஆயுதங்களால் கொலையாளிகள் மிரட்ட ஒன்னும் செய்ய முடியாமல் போனது.
காரணம் என்ன??
இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக, சம்பவ இடத்திலேயே சந்திரசேகர் குருஜி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், முன் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, 50 முறை இருவருமாக குருஜியை கத்தியால் குத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
குருஜியிடம் முன்பு வேலை செய்த ஒரு நபர் மீது அதிக சந்தேகம் இருப்பதாக போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், கொலை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பட்டப்பகலிலேயே இப்படி ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறி உள்ளது, அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.