"ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம்".. பழங்குடியின மாணவர் TO அமெரிக்க விஞ்ஞானி.. யாருப்பா இவரு?
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் இருந்து படித்து முன்னேறி இப்போது அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார் பாஸ்கர் ஹலாமி.
உலகில் எத்தனை தடைகள் எதிர்வரினும் துணிச்சலோடு போராடி, கல்வியின் துணையோடு வெற்றிபெறும் மனிதர்களை இந்த சமூகம் எப்போதும் கொண்டாட தவறுவது இல்லை. அவர்களுடைய வாழ்க்கை பல்லாயிரம் பேருக்கு வெளிச்சம் பாய்ச்ச கூடியதாக அமைகிறது. அப்படியானவர்களுள் ஒருவர் தான் பாஸ்கர் ஹலாமி.
மகாராஷ்டிர மாநிலம் குர்கேடா தாலுகாவில் உள்ள சிர்ச்சாடி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தில் பிறந்தவர் ஹலாமி. விவசாய பின்புலத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வேளை உணவு கூட கிடைக்காதா? என்ற நிலையில் குடும்பம் இருந்த வேளையில் படிப்பு மட்டுமே தனது குடும்பத்தை இந்த இருளில் இருந்து வெளிக்கொண்டு வரும் கருவி என்பதை உணர்ந்தார் அவர்.
கட்சிரோலியில் பட்டப்படிப்பு முடித்த ஹலாமி, நாக்பூரில் முதுகலை படிப்பையும் முடித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டில், நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற லக்ஷ்மிநாராயண் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எல்ஐடி) உதவிப் பேராசிரியராக ஹலாமி நியமிக்கப்பட்டார்.
அவர் மகாராஷ்டிர பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (எம்பிஎஸ்சி) தேர்வில் தேர்ச்சி பெற்றபோது, ஹலாமியின் கவனம் ஆராய்ச்சியில் இருந்தது. இதனால் அவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற முடிவெடுத்து, மிச்சிகன் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் தனது PhD-ஐ முடித்தார். டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்துவந்தார் ஹலாமி. தற்போது Sirnaomics பையோபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் மூத்த ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசிய அவர்,"எனது குழந்தைப் பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளில், எனது குடும்பம் மிகக் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வந்தது. ஒரு வேளை உணவைக் கூட பெறுவதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. பருவமழை காலங்களில் மிகுந்த சிரமங்களை சந்தித்தோம். மழையினால் விவசாயம் பாதிப்படைந்த போது
நாங்கள் மஹுவா பூக்களை சமைத்து சாப்பிட்டோம். ஆனால், அவை சாப்பிட மற்றும் ஜீரணிக்க எளிதானவை அல்ல. சில நேரங்களில் காட்டு அரிசியை மாவாக்கி அதை தண்ணீரில் சமைத்து வயிறு நிரம்ப குடிப்போம். எங்களது கிராமமே இப்படித்தான் இருந்தது. என் அப்பாவுக்கு கசன்சூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் சமையல் வேலை கிடைத்தவுடன் நிலைமை கொஞ்சம் மாறியது. அப்போது படிப்பு மட்டுமே எங்களது நிலைமையை மாற்றும் என நான் அறிந்துகொண்டேன்" என்றார்.