'இனி அவங்க மரத்துல ஏறாம...' 'சந்தோசமா படிப்பாங்கல...' - செல்போன் டவர் பரிசாக அளித்த சோனு சூட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைன் வகுப்பிற்கு சிக்னல் கிடைக்காத மாணவர்களுக்கு செல்போன் டவரையே அமைத்துக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் சோனு சூட்.

இந்தி திரைப்பட நடிகரான சோனு சூட் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் வகுப்பிற்கு சிக்னல் கிடைக்காத கிராமத்திற்கு ஏர்டெல் டவரையே பரிசாக அளித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்திலுள்ள மோர்னி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் அம்மலைக்கிராம இளைஞர்கள் 'தங்கள் பகுதியில் செல்போன்களுக்கு சரியாக டவர் கிடைப்பதில்லை எனவும், மரத்தில் ஏறி உச்சிக்கு சென்றால்தான் டவர் கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்கள் எனவும், தங்களுக்கு உதவுமாறும் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அறிந்த சோனு சூட் மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்கு உதவும் வகையில் தன் நண்பரான கரண் கில்கோத்ராவுடன் உடனடியாக ஏர்டெல் நிறுவனத்தை அணுகி, அக்கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துள்ளார். சோனு சூட்டின் இந்த சேவை மூலம் மோர்னி கிராம மாணவர்களுக்கு தங்கு தடையின்றி தற்போது டவர் கிடைத்தும் வருகிறது. செல்போன் டவரின் உதவியால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு தங்களுடைய படிப்பை தடையின்றி கற்ற மாணவர்கள் சோனு சூட்டுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கூறிய சோனு சூட், 'குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். இதுபோன்ற சவால்கள் அவர்களின் திறனை அடைய தடையாக இருக்கக்கூடாது. இனி அவர்கள் மரங்களில் ஏறாமல் மகிழ்ச்சியோடு படிக்கட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
