ரூ.200 ஐ மிச்சப்படுத்த நெனச்சு 8.5 லட்ச ரூபாயை இழந்த பெண்.. ஒரே FOOD ORDER-ல் மாயமான வாழ்நாள் சேமிப்பு.. பகீர் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய முயற்சித்த பெண்ணிடம் இருந்து 8.5 லட்ச ரூபாயை சுருட்டிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இணையம் நம்ப முடியாத பல சாதனைகளை சமகாலத்தில் நிகழ்த்தி இருக்கிறது. தகவல் தொழில்நுட்பமும் இணையமும் மனித குலத்திற்கு பல்வேறு வகையில் பெரும் உதவிகளை செய்து வருகின்றன. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில மோசடி கும்பல் அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை பறித்தும் வருகின்றனர். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்களை திருடுவதுடன் அவர்களது வங்கியில் இருக்கும் பணத்தையும் இந்த மர்ம கும்பல்கள் அபகரித்துக் கொள்கின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் மிக அதிர்ச்சியான அனுபவம் ஒன்றை பெற்றிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் பேஸ்புக் செயலியை உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது தனியார் உணவகம் ஒன்று ஒரு உணவு வாங்கினால் ஒன்று இலவசம் என வெளியிட்டு இருந்த விளம்பரத்தை அவர் பார்த்திருக்கிறார். இதனால் ஆச்சரியமடைந்த அந்தப் பெண்மணி அதனை கிளிக் செய்து உள்ளே சென்று விபரங்களை படித்திருக்கிறார்.
அப்போது 200 ரூபாய் மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்தால் மேலும் 200 ரூபாய் மதிப்புள்ள உணவு வழங்கப்படும் என அதில் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. அதை நம்பி அவர் அந்த லிங்கை கிளிக் செய்து இருக்கிறார். அப்போது வங்கி விவரங்கள் மற்றும் போன் நம்பர் கேட்கப்படவே அந்த பெண்மணியும் அதை உள்ளீடு செய்து இருக்கிறார். உடனடியாக அவருக்கு போன் கால் ஒன்று வந்திருக்கிறது. எதிர் முனையில் தன்னை தீபக் குமார் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய நபர் ஒரு அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யும்படி பெண்மணியிடம் கூறியதாக தெரிகிறது.
அதனை நம்பிய அந்த பெண்மணியும் அப்படியே செய்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவருடைய அக்கவுண்டில் இருந்து 24 முறையாக 8.5 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்மணி பாந்த்ரா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்க சென்று இருக்கிறார். மேலும், 24 வது முறை பணம் எடுக்கப்படும் போது அவர் வங்கியிலும் இதுகுறித்து புகார் கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து காவல்துறையினர் 419 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும் 62 சி மற்றும் 66 டி ஆகிய பிரிவுகளின் அடிப்படையிலும் மர்ம கும்பல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.
200 ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த நினைத்து தனது வாழ்நாள் சேமிப்பை பெண் ஒருவர் இழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.