"இலங்கை தமிழனா பொறந்தது என் தப்பா??... அந்த படம் வர்றதுக்கு... நான சம்மதிக்க காரணமே..." - உணர்ச்சிவசப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முத்தையா முரளிதரன்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாக உருவாகப் போவதாக அறிவிப்பு வெளியான நாள் முதல் அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் ஒரு தமிழின துரோகி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கக் கூடாது எனவும் கருத்துக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கலாமா, வேண்டாமா என விஜய் சேதுபதி யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதன் முறையாக இந்த சம்பவம் குறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'முப்பது ஆண்டுகளுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த ஒரு நாடு தான் இலங்கை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து நான் எப்படி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று எப்படி சாதித்தேன் என்பது தான் '800' திரைப்படத்தின் கதை. முதலில் அந்த கதையை திரைப்படமாக உருவாக தயக்கம் காட்டினேன்.
ஆனால், எனது சாதனைக்கு பின்னால் உள்ள எனது பெற்றோர்கள், என்னை வழி நடத்திய ஆசிரியர்கள், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு இதன் மூலம் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தான் இந்த கதை படமாக்க சம்மதித்தேன்.
இப்போது அந்த திரைப்படத்தின் மீது பல அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போர் சூழ்நிலையில் இருந்த ஒரு நாடு பத்து ஆண்டுகளாக போர் சூழ்நிலையில் இல்லாமல் இருந்ததை தான் 2009 ஆம் ஆண்டு என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி, ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் கொலைகளை ஆதரிக்கவும் இல்லை. சுனாமி சமயங்களில் ஈழ தமிழர்களுக்கு நான் செய்த உதவியை அவர்கள் அறிவர்.
நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை புரிந்ததால் தான் என் மீது தவறான பார்வை உள்ளது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முயற்சி செய்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?. தற்போது நடந்து வரும் அனைத்தும் சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்துக்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிராக சித்தரிப்பது வேதனையளிக்கிறது.
எவ்வளவு விளக்கமளித்தாலும் எனது எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானம் செய்ய முடியவில்லை என்றாலும், என்னை பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் பகிரப்பட்டு வரும் நிலையில், பொது மக்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்' என அந்த அறிக்கையில் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.