'இந்திய ஆசிரியருக்கு கிடைத்த '7.4 கோடி' ரூபாய் பரிசு'... 'இந்த காசை எப்படி செலவு பண்ண போறேன் தெரியுமா?'... இப்படி ஒரு பதிலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் கல்வியை ஊக்கப்படுத்திய இந்தியப் பள்ளி ஆசிரியருக்குச் சர்வதேச ஆசிரியர் பரிசாக ரூ.7.4 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு கிடைத்ததை விட அந்த காசை எப்படி செலவு செய்ய போகிறேன் என அவர் கூறியது தான் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு யுனெஸ்கோ பொருளுதவி அளித்து வருகிறது. இந்த பரிசுக்கு உலகம் முழுவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த வகையில், உலகம் முழுவதும் 140 நாடுகளிலிருந்து சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.
அதிலிருந்து இறுதிக் கட்டத்திற்கு 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 10 பேரிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சித்சிங் திசாலே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே (32). 2009-ம் ஆண்டில் சோலாப்பூர் மாவட்டம் பரிதேவாடி ஜில்லா பரிஷத் ஆரம்பப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது அந்த பள்ளி முழுவதுமாக சேதமடைந்து, பரிதாபநிலையில் காணப்பட்டது.
இதையடுத்து கட்டிடத்தைச் சீரமைத்த ரஞ்சித், பின்னர் உள்ளூர் மொழியில் பாடப்புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தார். அத்துடன் க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்களுக்கு ஆடியோ, வீடியோ வடிவிலும் பாடங்களை ஒருங்கிணைத்தார். இதன் மூலம் கிராமத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். 100 சதவீதம் பெண் குழந்தைகளின் பள்ளி வருகையை உறுதி செய்தார். ரஞ்சித்தின் பள்ளி அடைந்த வளர்ச்சி, மற்ற கிராமப் பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தது.
ரஞ்சித்சிங் திசாலே முன்னெடுத்த க்யூ ஆர் கோடு முறை 2017-ல் மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அதே போன்று "எல்லைகளைத் தாண்டுவோம்" என்ற பொருள் கொள்ளும் வகையில் Let’s Cross the Borders என்ற திட்டத்தையும் தொடங்கினார். இதன் மூலம் பதற்றமான, முரண்பாடுகளைக் கொண்ட பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களிடம் அமைதியை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல், இராக் மற்றும் ஈரான் மற்றும் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இளைஞர்களை ஒருங்கிணைத்தார்.
அவரின் முயற்சி கைகொடுக்க 8 நாடுகளிலிருந்து சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர். அதேபோலத் தன் வீட்டிலேயே சொந்தமாக ஆய்வகத்தை உருவாக்கி, அறிவியல் ஆய்வுகளை மாணவர்களுக்குச் சுவாரசியமாக விளக்குவதிலும் ரஞ்சித்சிங் ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறார். தனக்கு இந்த விருது கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சியில் இருக்கும் ரஞ்சித்சிங், "ஆசிரியர்கள்தான் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள். ஆசிரியர்கள் கொடுப்பதிலும் பகிர்வதிலும் எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்'' எனக் கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கூறியதோடு நிற்காமல், அவருக்குக் கிடைத்த 7.4 கோடி ரூபாய் பணத்தில் 50 சதவீதத்தை இறுதிக் கட்டத்துக்குத் தேர்வான 10 போட்டியாளர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்க முடிவு செய்துள்ளார். இருந்து போட்டிக்குத் தேர்வானவர்களின் வியக்கத்தக்க பணிக்காக என்னுடைய ஆதரவுக் கரம் இது. இந்த பரிசுத் தொகையை இந்த வழியில் தான் நான் செலவழிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள ரஞ்சித்சிங் திசாலே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித்சிங்க்கு கிடைத்த பரிசு தொகையை விட, அவர் தனது போட்டியாளர்களுக்கும் அந்த பணத்தைப் பிரித்துக் கொடுப்பேன் எனக் கூறியிருப்பது மூலம் ஒரு ஆசிரியரால் சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிவும் என அவர் நிரூபித்துள்ளார் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதன்மூலம் இறுதிக்கட்டப் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா சுமார் ரூ.41 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ''மாதா, பிதா, குரு, தெய்வம்'' என்ற கூற்றை மெய்யாக்கியுள்ளார் ரஞ்சித்சிங் திசாலே.