'ஒரு பக்கம் கொரோனா அச்சம்'... 'கங்கை நதிக்கரையில் திரண்ட 1 லட்சம் பக்தர்கள்'... கும்பமேளாவில் நடப்பது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரித்வார் நகரில் நடைபெற்றுவரும் கும்பமேளா காரணமாக வைரஸ் அதிவேகமாகப் பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பிற மாநிலங்களில் வேறு பல கட்டுப்பாடுகள் என்று விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று கங்கை நதியிலே பல லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடியிருப்பது கொரோனா குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஹரித்வார் நகரில் அதிக அளவில் மக்கள் கூடுவதால், கொரோனா குறித்த கவலை எழுந்துள்ளது. இதனால் ஹரித்வார் நகரம் முழுவதும் முகக்கவசங்களை அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முழுவீச்சாக அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று கண்டறியும் பரிசோதனைகளை அதிக அளவில் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில் தொற்று இருக்கிறது என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபருடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கங்கை நதியின் கரையில் உள்ள பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல் நடத்துவதால், அந்தப் பகுதி முழுவதையும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் கொண்டு மாநில அரசு கண்காணித்து வருகிறது. அத்துடன் பொதுமக்கள் புனித நீராடத் தனி நேரம் மற்றும் சாதுக்கள் புனித நீராடத் தனி நேரம் என்று தனித்தனியே நேர ஒதுக்கீடு செய்யவும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனிடையே நேற்று அமாவாசையை முன்னிட்டு புனித நீராடல் பெரிய அளவிலேயே நடைபெற்றுள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களிலும் அதிக எண்ணிக்கையில் புனித நீராடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று ராமநவமி என்பதால் அன்றும் அதிக அளவில் பக்தர்கள் கங்கைக்கரையில் நீராட வருவார்கள் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இதுவரை கிட்டத்தட்ட 400 பேருக்குத் தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளிலும் தீவிரமாக கொரோனா சோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.