'மனிதம் செத்து போச்சுன்னு சொன்ன நம்பாதீங்க சார்'... 'இதுபோல மனுஷங்க ரூபத்தில் இருக்கு'... 900 உயிர்களை காப்பாற்றிய COMMON MAN!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனிதம் மறைந்து விட்டது என்று சொன்னால் நிச்சயம் நம்ப வேண்டாம். அது இதுபோன்ற மனிதர்கள் ரூபத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
தற்கொலைக்கு முயன்ற மனிதர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், இன்று தான் பட்ட கஷ்டம் யாரும் படக் கூடாது என இதுவரை 900 பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய். இவர் பக்கவாதம் காரணமாக, கடந்த 2019-ல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார், கவுரவ். ஆனால் எதோ ஓர் எண்ணம் தடுக்க, மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இந்த பிரபஞ்சம் ஒரு பணியை வைத்துள்ளது. அதைச் செய்து முடிக்காமல் நமது உயிர் போகாது என்பதை உணர்ந்து கொண்ட கவுரவ், தற்போது அவரால் உதவி பெற்று உயிர் பிழைத்தவர்கள் மூலம் அதனை அறிந்திருப்பார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் கவுரவும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்குப் படுக்கை வசதியும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் வசதியும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனை படிக்கட்டுகளுக்குக் கீழேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தவர் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்துள்ளார்.
இதன்பின் அவரின் மனைவி நீண்ட மணி நேரங்களுக்குப் பிறகு ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்து கொண்டுவர அதன்பிறகே உயிர் தப்பியுள்ளார். தான் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக தற்போது தனது சொந்த பணத்தில் தன் வீட்டிலேயே, சிறிய ஆக்சிஜன் வங்கி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். 10 ஆக்சிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்ட இந்த வங்கி தற்போது 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அளவுக்கு மாறியுள்ளது.
இதைக்கொண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகத் தனது காரில் கொண்டுபோய் வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலன் தேறிய பின்னரே தனது ஆக்சிஜன் சிலிண்டரை மீண்டும் எடுத்துக்கொள்கிறார். பாட்னா மட்டுமல்லாமல் பீகாரின் 18 மாவட்ட மக்களும் இவரைத் தொடர்புகொண்டு தற்போது சேவையைப் பெற்று வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
என்னால் முடிந்தவரை, இந்த உடலில் உயிர் உள்ளவரை இந்தப் பணியைச் செய்வேன் என கூறியுள்ள கவுரவ் ராய், இதுவரை 900 உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு மரணமே இல்லை என்பதற்கு உதாரணம் தான் கவுரவ் ராய்.