'நவம்பர் 22ம் தேதி கல்யாணம்'... 'போட்டோ ஷூட்டிற்காக டைட்டானிக் போஸில் போட்டோ எடுக்க முயற்சி'... இளம் ஜோடிக்கு நடந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆயிரம் கனவுகளோடு திருமணத்திற்குத் தயாரான ஜோடிக்கு நடந்துள்ள துயரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரும் சசிகலா என்ற இளம்பெண்ணும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்கள். தங்கள் காதலை வீட்டில் சொன்ன நிலையில், இரு வீட்டாரும் அவர்கள் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில், வரும் 22ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்து வந்தார்கள். அப்போது திருமணத்திற்கு முன்பு இருவரும் போட்டோ ஷூட் எடுக்கலாம் என முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மைசூர் அரண்மனை, முதுகுத்தூர் கோவில் மற்றும் தலக்காடு பகுதியில் ஓடும் காவிரி ஆறு ஆகிய இடங்களில் போட்டோ ஷூட் செய்ய முடிவு செய்தனர். அதன்படி போட்டோ ஷூட்டை முடித்துக் கொண்டு இறுதியாக தலக்காடு பகுதியில் போட்டோ ஷூட் செய்ய வந்தனர். அப்போது படகில் செல்லாமல் பரிசலில் சென்று போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து அதன்படி பரிசலில் சென்றார்கள்.
அப்போது டைட்டானிக் போஸில் அமர்ந்து போட்டோ எடுக்கலாம் என சசிகலா முடிவு செய்து, அவ்வாறு உட்கார தயாரானார். அப்போது ஹீல்ஸ் செருப்பு அணிந்திருந்த நிலையில், அதனால் சற்று தடுமாற்றம் ஏற்பட்ட நிலையில் பரிசலும் சற்று தடுமாறியது. அப்போது சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வேகமாகத் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், பரிசல் ஓட்டியால் பரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போகப் பரிசல் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
மற்றொரு பரிசலில் குடும்பத்தினர் வந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் கண் முன்பே இருவரும் பரிதாபமாக ஆற்றில் மூழ்கி பலியானார்கள். பரிசல் ஓட்டியவருக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர் ஆற்றில் நீந்தி உயிர் தப்பினார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் இருவரின் உடலையும் மீட்டனர்.
ஆசையாகக் காதலித்து, திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க இருந்த இளம் ஜோடியின் எதிர்பாராத மரணம் இரு குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.