'வருகிறது டவ்-தே புயல்'... 'தமிழகத்திற்கு அலெர்ட்'... 'எங்கெல்லாம் கனமழை இருக்கும்'?... வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரபிக்கடலில் நாளை டவ்-தே- புயல் உருவாக உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது குஜராத் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகம், கேரளாவில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதிய புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. மேலும் புயல் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகள் மற்றும் விசைப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கன்னியாகுமரியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.