'4 மணி நேரம் சாப்பிடலன்னா இறந்துடுவாங்க, ஆனால்...' அப்படிப்பட்ட நான் பயங்கரவாதியா...? அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநான் பயங்கரவாதியல்ல; சர்க்கரை நோயாளியாக இருந்துகொண்டே டில்லிக்காக போராடி உள்ளேன். தரமான கல்வி அளித்துள்ளேன் என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக பேசி உள்ளார்.

டில்லி தேர்தல் பிரசாரத்தின் போது சமீபத்தில் பேசிய பா.ஜ., எம்.பி., பர்வேஷ் வர்மா, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பான புகாரை அடுத்து பர்வேஷ் வர்மாவை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்க பா.ஜ,விற்கு உத்தரவிட்ட இந்திய தேர்தல் கமிஷன், 2 நாட்களுக்கு அவர் பிரசாரம் செய்யவும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பர்வேஷின் பிரசாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய கெஜ்ரிவால், கடந்த 5 ஆண்டுகளில் டில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் எனது சொந்த குழந்தையாக நினைத்து அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்துள்ளேன். அப்படி செய்ததால் தான் நான் பயங்கரவாதியா? மக்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுத்ததற்காக நான் பயங்கரவாதியா?
நான் சர்க்கரை நோயாளி. ஒரு நாளைக்கு 4 முறை இன்சுலின் எடுத்துக் கொள்கிறேன். இன்சுலின் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை நோயாளி 3 முதல் 4 மணி நேரம் ஏதும் சாப்பிடாமல் இருந்தால் இறந்து விடுவார். இந்த சூழலிலும் நான் ஊழலுக்கு எதிராக 15 நாட்கள் ஒருமுறையும், 10 நாட்கள் மறுமுறையும் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். 'கெஜ்ரிவால் 24 மணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார்' என ஒவ்வொரு டாக்டரும் சொன்னார்கள்.
ஆனால் என் உயிரையே நாட்டுக்காக தயாராக இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் என் மீது தாக்குதல் நடத்த எந்த வழியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எனது வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர். என் மீது பல வழக்குகள் போட்டுள்ளனர். அப்படி இருக்கையில் நான் எப்படி பயங்கரவாதி ஆக முடியும்?. இவ்வாறு அவர் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.
