‘ஒரு தடவை சார்ஜ் பண்ணா 240 கிமீ வரை போகலாம்’.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் ஓலாவுக்கு ‘போட்டியாக’ களமிறங்கும் பெங்களூரு நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஓலாவுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் மற்றொரு நிறுவனம் களமிறங்கியுள்ளது.
ஓலா நிறுவனத்தை தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது. தங்களது உற்பத்தி ஆலை விவரங்களை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, சிம்பிள் எனர்ஜியின் ஆலை ஓசூரில் அமைகிறது. உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சுமார் 2 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் ஆலையை கட்டமைத்து வருகிறது.
தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.350 கோடியை முதலீடு செய்ய சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘சிம்பிள் ஒன்’ (Simple One) என்ற பெயரில் அறிமுகமாகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார், இருசக்கர வாகனத்தை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனை வழங்கும். இந்தியாவில் சிம்பிள் ஒன் விலை ரூ. 1.10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கோவா, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.