900 பேரை ஒரே 'ஜூம்' காலில் வேலைய விட்டு தூக்கிய 'பிரபல' நிறுவனம்...! - ஆடிப்போன ஊழியர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஒரு ஜூம் காலின் மூலமாக பிரபல நிறுவனத்தின் சி.இ.ஓ. செய்துள்ள காரியம் அமெரிக்காவில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பின் வேலையை விட்டு தூக்குவது வாடிக்கை ஆகிவிட்டது. வெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமல்லாமல் பிற அனைத்து நிறுவனங்களிலும் தொடர்கதையாகி வருகிறது.
அமெரிக்காவில் பெட்டர் டாட் காம் என்ற நிறுவனம் அடகு வைத்தல், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு பணியாற்றும் 900 பேருக்கு கடந்த புதன் கிழமையன்று ஜூம் கால் அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பெட்டர் டாட் காமின் சி.இ.ஓ. விஷால் கார்க் பேசியுள்ளார். ஊழியர்களிடம் பேசிய விஷால், 'இந்த போன் காலில் யாரெல்லாம் இருக்குறீர்களோ அவர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டவர்களில் ஒருவராக இருப்பீர்கள். உங்களுக்கு இனி பெட்டர் டாட் காமில் வேலை இல்லை' என்று கூறி, அழைப்பை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து விஷால் கார்க் அளித்துள்ள விளக்கத்தில், 'பொதுவாக நான் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். கடந்த முறை ஜூம் காலில் பேசி, பணியாளர்களை நீக்கம் செய்தபோது நான் அழுதுவிட்டேன். நான் பணியில் இருந்து நீக்கியவர்கள் ஒரு நாளில் வெறும் 2 மணி நேரம் மட்டுமே பணிபுரிந்துள்ளனர். எனவே இவர்கள் சக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நேரத்தை திருடியுள்ளனர்.
மேலும் அவர்கள், உற்பத்தி குறைவு, செயல் திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்' என தெரிவித்துள்ளார்.
இந்த செய்திகளை வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், பணியாளர்களுக்கு வந்த ஜூம் கால் அழைப்பை, நரகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எழுதியுள்ளன.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரவியதால் பெட்டர் டாட் காமும், அதன் நிறுவனர் விஷால் கார்க்கும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
