விஜய் காட்டிய மாஸ்.. ஷூட்டிங் முதல் தெறி செல்ஃபி வரை - நெய்வேலி நினைவுகள் - A Look Back.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெய்வேலியில் விஜய் எடுத்த செல்ஃபி தான் இன்று ட்ரென்டிங். இந்த நேரத்தில் கடந்த சில தினங்களாக நெய்வேலியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ.

vijay's master memories in neyveli post it raids

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதையடுத்து படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் டென்ட் அடித்தது படக்குழு. நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங் நடக்கிறது என வலைதளங்களில் நியூஸ் பரவியது. எப்போதும் போல ரசிகர்களும் ஒரு லைக் போட்டுவிட்டு, அடுத்த அப்டேட் எப்போது என்ற காத்திருப்பில் இருந்தனர். ஆண்ட்ரியா, ஆர்ஜுன் தாஸ் ஆகியோரை கொண்டு படத்தின் முக்கியமான சேஸிங் காட்சியை படமாக்குவதில் படக்குழு பிசியாக இருந்தது. அந்த நேரத்தில் தான் வந்தது வருமான வரித்துறை. பிகில் படத்தில் வரி எய்ப்பு நடந்திருப்பதாக சொல்லி, அப்படத்தின் ஃபைனான்சியர், தயாரிப்பாளர், டிஸ்ட்ரிப்யூடர் ஆகியோரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை, விஜய்யை நேரில் சந்தித்து சம்மன் அளித்தது. இதையடுத்து விஜய் சென்னைக்கு காரில் வந்தார். இந்த செய்தி வந்தவுடன் சோஷியல் மீடியா முழுவதிலும் விஜய் ஹாட் டாப்பிக்கானார். ஏற்கனவே புலி படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடந்த ரெய்டை எடுத்துக்காட்டி பல செய்திகள் வலம் வந்தன. ஒருபக்கம் விஜய்க்கு ஆதரவாக குரல்கள் என்றால், இன்னொரு பக்கம் விஜய் மீது அவதூறுகளை அள்ளி வீசினர்.

வருமான வரித்துறையின் ரெய்டு தொடர்ந்து நடந்தது. விஜய்யின் பனையூர் வீட்டை அத்தனை நீயூஸ் சேனல்களும் கழுகுகளாக வட்டமடித்தன. ஊரே காத்திருந்த அந்த செய்தி, வருமான வரித்துறையின் அறிக்கையாக வந்தது. நடிகர் விஜய்யிடம் அவரது சொத்துக்கள் பற்றியும், அவர் வாங்கும் சம்பளம் பற்றியும் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாக அறிவித்தது ஐடி டிப்பார்ட்மென்ட். விஜய் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிந்த அந்த நொடி ஆரம்பமானது கொண்டாட்டம். வருமான வரித்துறையே பிகில் 300 கோடி வசூலித்தது என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டது என அப்பாயின்ட் ஆர்டரை கையில் ஏந்திய பிச்சுமணியாக விஜய் ரசிகர்கள் ஆன்லைனை அலறவிட்டனர். #MrPerfectThalapathyVijay எனும் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து விஜய்யின் இமேஜை டாப்புக்கு ஏற்ற தொடங்கினார்கள் ரசிகர்கள். தன் தலைவன் மீது சுமத்தப்பட்ட கரையை துடைத்தெறிந்து விஜய்யை கொண்டாடினார்கள்.

மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பு ஆரம்பமானது. ரெய்டு டென்ஷன் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கூலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். ஆனால், பிரச்சனை அப்போதும் ஓய்ந்த பாடில்லை. மாஸ்டர் படத்திற்கு எப்படி பாதுக்காப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் அனுமதி வழங்கலாம் என ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் நெய்வேலி பாஜக அமைபினர். இந்த செய்தி தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் பரவ, விஜய் மீதான ஆதரவு குரல் மேலும் வலிமையானது. ஆர்ப்பாட்டம் செய்தவர்களை காவல்துறை சமாளித்து அனுப்ப, அங்கே கூடியது விஜய் ரசிகர்களின் படை. ஷூட்டிங் முடித்து விஜய் காரில் வர, தனக்காக நிற்கும் ரசிகர்களை கண்டவுடன் நிலைகொள்ளாமல் கார் கதவை திறந்து துள்ளிகுதித்து வெளியில் இறங்கினார். அவ்வளவுதான்.. தளபதி.. அண்ணா என ரசிகர்களின் குரல்கள் வின்னை பிளந்தன. இவ்வளவு அழுத்தங்கள் இருந்தும் எப்படி இந்த மனிதன் இவ்வளவு கூலாக இருக்கிறார் என புரியாமல் தவித்தது ஒருதரப்பு.

இதுவரை பார்த்தது ட்ரெய்லர் தான்ம்மா, மெயின் பிக்சரே இது தான் என அடுத்த நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு, அருகில் இருந்த வேன் மீது ஏறி ரசிகர்களுக்கு காட்சியளித்தார் தளபதி விஜய். அத்தோடு நிற்காமல், தன் ஃபோனில் ரசிகர்களுடன் சேர்ந்து இருக்கும் செல்ஃபி ஒன்றையும் விஜய் எடுக்க, மொத்த சமூக வலைதளங்களும் சிதறியது. மாலை சூரியன் மேற்கில் மறைய, வேன் மீது விஜய் உயர்ந்து நிற்க, ஒரு தலைவன் உருவாகிறான் என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்தியது அந்த காட்சி. சோஷியல் மீடியாவே, விஜய் எடுத்த அந்த செல்ஃபிக்காக ஏங்கியது. அதை விஜய் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதுவும் நடந்தது. அடுத்த நாளே, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் எடுத்த மொஸ்ட் வான்ட்டட் செல்ஃபி வெளியானது. அத்தனை ஆயிரம் ரசிகர்ள் கொண்ட அந்த ஃப்ரேமில், விஜய்யின் முகத்தில் இருந்த பூரிப்பு சொல்லிவிடும், நிஜமாகவே அவர் ரசிகர்களை தன் நெஞ்சில்தான் குடி வைத்துள்ளார் என்று. Thalapathy Vijay Selfie ட்விட்டரில் ஆல் இன்டியா ட்ரென்ட் அடித்தது. இந்த பரப்பரப்பு அடங்குவதற்குள், விஜய்யை காண பெருவெள்ளமாய் நெய்வேலியில் கூடியது மக்கள் அலை. இந்த முறை வேனுக்கு பதில் பஸ்! பஸ் மீது ஏறி மக்களை பார்த்த விஜய், அவர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்து போனார். சட்டென சிரம் தாழ்த்தி அந்த மக்கள் கூட்டத்திடம் விஜய் தலைவனங்கிய போது, ஒட்டுமொத்த மக்கள் மனதிலும் உயர்ந்து நின்றார்.

இதோ நெய்வேலியில் படப்பிடிப்பு நிறைவடைய போகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு வேறு ஊருக்கு செல்லதான் போகிறார்கள். அங்கும் விஜய்யை காண வர தான் போகிறார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி விஜய்யை நேசிக்கும் ஒவ்வொருக்கும் ஸ்பேஷலாக மாறி இருக்கிறது நெய்வேலி. சினிமா வாழ்க்கையில் விஜய் தனது மாஸை ஒவ்வொரு முறையும் காட்டி வந்துள்ளார். ஆனால் நிஜ வாழ்க்கையில் விஜய்யின் மாஸ் என்னவென்றும், அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கையும் உலகத்துக்கே காட்டியிருக்கிறது இந்த நெய்வேலி. தான் கணக்கில் காட்டாமல் சேர்த்து வைத்திருக்கும் சொத்து என்னவென்று நெய்வேலியில் எடுத்த ஒற்றை செல்ஃபியில் சொல்லிவிட்டார் விஜய். அதனால் தான் என்னவோ அவர் நெய்வேலிக்கு நன்றி தெரிவித்தார்.

மொத்தத்தில் விஜய்யின் வாழ்க்கை அத்தியாத்தில் நெய்வேலி சம்பவம் தரமான சம்பவம்!

Entertainment sub editor