தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்தில் வயதான தோற்றத்தில் நடிகை லட்சுமியும், இளம் தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா, தான் ஹிந்தியில் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் செய்த ‘கபீர் சிங்’ குறித்து பேசுகையில், காதல் என்றால் என்ன என்ற தனது கருத்தினை குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதாவது, ‘ஒருவரையொருவர் அறைந்துக் கொள்ள சுதந்திரம் இல்லையென்றால், அது காதல் இல்லை என்பது எனது கருத்து’ என்றிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சந்தீப் வாங்காவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ‘Deeply Disturbing’ என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘அர்ஜுன் ரெட்டி’ ரிலீசானபோது அந்த படத்தை சமந்தா பாராட்டியதையும், தற்போது பகிர்ந்த இன்ஸ்டா பதிவையும் ஒப்பிட்டு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை சமந்தா,‘ஒரு படத்தை ரசிப்பதும், ஒரு கருத்தை மறுப்பதும் வெவ்வேறு விஷயங்கள். ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற நபரின் வாழ்க்கை எனக்கு பிடித்தது. ஆனால், காதல் என்பது ஒருவரையொருவர் அறைந்துக் கொள்ளும் சுதந்திரம் வேண்டும் என்ற பொதுப்படையான கருத்து எனக்கு பிடிக்கவில்லை’ என்றும் கூறியுள்ளார்.