ஒரு அட்டகாசமான நடிப்பு அசுரனைப் பார்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 'Trance' ஒரு மீள் பார்வை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நள்ளிரவு. ஒரு மனிதன் காட்டில் நடந்து கொண்டிருந்தபோது சிங்கம் ஒன்று துரத்த, உயிர் பயத்தில் ஓடுகிறான். அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறுகிறான், அதன் இன்னொரு பக்கம் ஆறு. அவனுக்கு நீச்சல் தெரியாது....எப்படி தப்பிக்க என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த மரத்தில் ஒரு கயிறு தென்படுகிறது. அதை பிடிக்கலாம் என்று தொட நினைத்தவனுக்கு ஒரு ஜோடிக் கண்கள் இருட்டில் பளிச்சிடுகிறது. அது, ஒரு மலைப்பாம்பு. திடுக்கிட்ட அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலை, அதே கணத்தில் அதே மரத்திலிருந்து ஏதோவொன்று பிசுபிசுவென்று வடிந்து தற்செயலாக அவன் நாவில் படுகிறது, உயிர் வரை தித்தித்தது அந்தத் தேன். இன்னும் கிடைக்குமா என்று நாக்கைத் தொங்க போட்டபடி காத்திருந்தான். இதுதான் வாழ்க்கை.  உலகமே கொரோனா பிரச்னையில் ஸ்தம்பித்து கிடக்க, ஒவ்வொரு நாளும் கேள்விப்படும் விஷயங்கள் அத்தனை உவப்பானதாக இல்லாமல் இருக்க, திரை ரசிகர்களைப் பொருத்தவரையில் மரத்தில் அகப்பட்ட மனிதனுக்கு கிடைத்த ஒரு துளி தேன் போலத்தான் OTT platform கிடைத்துள்ளது.

Review of Trance featuring Fahadh Faasil and Nazriya Nazim

பார்த்த படம், பார்க்காத படம், தெரிந்த மொழி, தெரியாத மொழி என்ற எல்லைகளை எல்லாம் தாண்டி சகட்டு மேனிக்கு படங்களைப் பார்த்து வரும் ஒரு பெரும் குழு உருவாகியுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடவே இந்தக் கட்டுரை. திரையரங்கில் ட்ரான்ஸ் என்ற மலையாளப் படத்தைப் பார்க்காமல் விட்ட காரணம், நேரமின்மை. அமேஸான் ப்ரைமில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த பின் நிறைய யோசிக்கத் தோன்றியது. இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கவே செய்தன. ஆனால் எல்லா மைனஸ் விஷயங்களையும் தவிர்த்து மனதில் நிற்கும் ஒரு பிம்பம் - ஃபகத் ஃபாசில். சேட்டனின் நடிப்புத் திறன் பற்றி தனியாக சொல்லவே வேண்டாம். ஆனால் இந்தப் படத்தில் அவர் வேற லெவலில் விளாசியிருப்பதால் சின்னதாக ஒரு அலசல்.

ஒரு பக்கம் ரெஸ்டாரெண்ட்  சர்வராகவும், இன்னொரு புறம் மொடிவேஷனல் ஸ்பீக்கராகவும் வேலை செய்கிறான் விஜு  பிரசாத் (ஃபகத் ஃபாசில்). கன்யாகுமரியில் ஒரு கடல் பார்த்த வீட்டில் மனநலம் பாதிப்புடைய தம்பியும் (ஸ்ரீநாத் பாஸி) அவனுடன் வசிக்கிறான். இருவருக்கும் சிறு வயது பாதிப்புக்கள் நிறைய இருந்தாலும், தம்பி ஒரு கட்டத்தில் தாங்கவியலாத மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறான். ஏற்கனவே ஹைபர் ஆக்டிவ் மனநிலையில் இருக்கும் விஜுவுக்கு இந்த மரணம் பேரடியாக விழ, தூக்கமில்லாமல் தவிக்கிறான். அந்த ஊரில் இனி இருக்க வேண்டாம் என்று மும்பைக்கு போகிறான்.  அவனுடன் எங்கும் வருவது அவன் மனம்தானே? மீண்டும் டிப்ரஷன் பிரச்சனையில் வீழ்கிறான். வேறு வழியில்லை தானும் செத்துப் போய்விடலாம் என்று நினைக்கும் போது வாழ்க்கை அவன் முன் சில வேடிக்கை வினோதங்களை நிகழ்த்துகிறது.

கன்யாகுமரியில் ஏதேச்சையாக ஒரு லிப்டில் சந்தித்த பெண், மும்பையில் அவனது வாழ்க்கைக்கு ஒரு லிஃப்ட் கொடுக்கிறாள்.  அவள் மூலமாக சாலமன் டேவிஸ் (கெளதம் மேனன்) மற்றும் ஐஸக் தாமஸ் (செம்பன் வினோத் ஜோஸ்) என்பவர்களை விஜு சந்திக்கிறான். அவனை நிழல் உலகத்துக்குள் நுழையும் ஒரு வாய்ப்பை தங்கத் தட்டில் வைத்து தருகிறார்கள் அவர்கள். ஒரு கார்ப்பரேட் மத போதகராகும் வேலைதான் அது. முதலில் விஜு தயங்கினாலும் அவனுடைய தற்போதைய வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாததால் முயற்சி செய்ய முடிவெடுக்கிறான். மதத்தின் பெயரால் மனிதர்களின் மனங்களில் மட்டும் இல்லாமல் பணத்திலும் கைவைத்து மோசடி செய்யும் கும்பலின் பிரதிநிதியாகிறான் அவன். அவரச்சன் (திலீப் போத்தன்) என்பவர் அவனுக்கு அடிப்படை கிருத்துவ மதம் குறித்தும், பைபிளை கற்பிக்கவும் தொடங்க, விஜுவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. ஏற்கனவே பேச்சில் மன்னனான விஜு பாஸ்டர் ஜோஷ்வா கார்ல்டனாக எப்படி உருமாறுகிறான், அதன் பின் அவனுடைய வாழ்க்கை என்ன ஆனது என்பதை மிகச் சில திருப்பங்களுடன் சொல்கிறது ட்ரான்ஸ் படம்.

மதமாற்றம் என்ற விஷயம் உலகம் முழுவதும் எல்லா காலகட்டத்திலும் நடந்து கொண்டே இருக்கும் ஒன்று. அதிலும் அன்பே பிரதானமாக கருணையே கொள்கையாக கொண்ட மதங்கள் கூட மனிதர்களின் மனங்களை எப்படியாவது மாற்றி தங்கள் மதத்துக்குள் இழுக்க நினைப்பது அறியாமையின் உச்சம்.  சைலென்ஸ் என்ற படத்தில் இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி விரிவாகப் பேசியிருக்கும் விஷயமும் இதுதான்.

ட்ரான்ஸ் படத்தில் இன்னொரு விஷயம் மையமாக இருப்பது ஏற்கனவே காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நாம் பார்த்த சில காட்சிகள்தான். மதத்தின் பெயரால் அவதார புருஷனாக தம்மை நிறுவிக் கொள்பவர்கள் செய்யும் அற்புதங்கள் எனும் கண்கட்டு வித்தைகள். அந்த பித்தலாட்டங்கள் எப்படி நவீன காலத்திலும் அரங்கேறுகிறது என்பதை மிகத் தெளிவாக இந்தப் படம் விளக்குகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விஜேவான மேத்யூ (சோபின் ஷாஹிர்) ஜோஷ்வாவை கேள்விகளால் கிழித்து தோரணம் கட்டும் காட்சியை சொல்லலாம். கடைசியில் குயுக்தியால் அவனையும் வெல்கிறான்.

பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் காட்சிகளில் தென்படும் அது, கதையிலும் சற்று ஆழமாகத் தென்பட்டிருக்கலாம் என்பது பெரும்குறை. நல்ல கதையம்சம், ஆனால் அதை சரிவர கையாளாமல் விட்டுவிட்டனர். இயக்குநர் அன்வர் ரஷீதுக்கு இது கத்தியின் மேல் நடக்கும் பணி. அதனால் யாரையும் காயப்படுத்தாமல், மத விஷயங்களில் முடிந்த அளவு பொதுவாக காண்பித்துள்ளார். இது சென்ஸாரில் எத்தனை வெட்டு வாங்கியது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். தவிர சில கதாபாத்திரங்களின் பங்களிப்பு எதுவுமற்று ப்ளாஸ்டிக்காக இருந்ததும் படத்தை சலிப்படையச் செய்த விஷயம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், விஜுவுக்கு மருத்துவம் பார்க்கும் மனநல டாக்டர் (ஜினு ஜோஸ்), தாமஸ் (விநாயகன்), எஸ்தர் லோபஸ் (நஸ்ரியா). இவர்களின் மிகை பாத்திரப் படைப்பும், தெளிவற்ற கதையில் எவ்வளவு நேரம் திரையில் தோன்றினாலும் மனதில் பதியவில்லை. 

ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கி நிறுத்தி சமன் செய்கிறார் ஒருவர். அவர்தான் இந்தியத் திரையுலகத்துக்கே பெருமை சேர்க்கும் அசல் நடிகனான ஃபகத் ஃபாசில். ஒரு சராசரி மனிதனாக, தோல்வியுற்றவனாக, நிராதரவானவனாக படத்தின் ஆரம்பக் காட்சியில் அவரது நடை உடை பாவனைகள் இருக்கும். தன்னை கண்ணாடியில் பார்த்து, ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்ட உற்சாகத்துடன் நான் எப்படியும் ஜெயிப்பேன் என்ற உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு தீவிரமான இளைஞனை அச்சு அசலாக நம் கண் முன் நிறுத்துகிறார். வேறொரு அவதாரம் எடுத்தபின்னர், மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் ஒரு காட்சியில், நார்கோஸ்டிக் மனநிலையை மிகத் துல்லியமாக காண்பித்திருப்பார். கதையில்தான் ஏகப்பட்ட குழப்பம், ஆனால் இவரது நடிப்பு தெள்ளந் தெளிவான நீரோடை.

தொடர் மாத்திரைகளால் மன நலம் பிறழ்ந்த நிலையில், எது உண்மை எது கற்பனை (இல்யூஷன்) என்று தெரியாத அறிதுயில் (ட்ரான்ஸ்) மனநிலையை அப்படியே திரையில் மீட்டிருவாக்கம் செய்திருப்பார் ஃபகத்.  உடல் சோர்வும், குபீர் சிரிப்பும், கண்களில் தெறிக்கும் பண ஆசையும் என உடல்மொழியிலும் விழி உருட்டலிலும் குறுஞ் சிரிப்பிலும் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்றுவிடுகிறார். எண்டர் தி வாய்ட் என்ற படத்தை காஸ்பர் நோயி (Gaspar Noé) இயக்கி உள்ளார். அவரது அந்தப் படத்தில் Drugsதான் மையக் கதை. ட்ரக் எடுத்தபின் ஒருவரது அதீத மனநிலையை காட்சிப்படுத்துவது மிகவும் கடினம். அதை மிகத் துல்லியமாக அந்தப் படத்தில் எக்ஸ்பரிமெண்ட் genre-ல் செய்திருப்பார் காஸ்பர். ட்ரான்ஸ் அத்தகைய முயற்சியைச் செய்திருந்தாலும், ஃபகத்தின் நடிப்பு அதில் பெருமளவு வேற்றி பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு நிறைவின்மை படம் நெடுகிலும் உள்ளது. அதற்குக் காரணம் திரைக்கதையில் உள்ள தொய்வு. கதாபாத்திரங்களின் பங்களிப்பு. இந்த இரண்டு விஷயங்களும் கவனத்துடன் இருந்திருந்தால் இந்நேரம் ஃபகத்தின் நடிப்பாற்றல் காஸ்பரின் கதாபாத்திரங்களை விட அதிகம் பேசப்பட்டிருக்கும் என்பது திரை ஆர்வலர்களுக்கான அதி உண்மை.

இந்தப் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு எவ்வளவோ பார்த்துட்டோம், இதென்ன பிரமாதம். one button touch-ல் ஒரு ட்ரான்ஸ் உணர்வு அருமையான நடிப்பாற்றலால் கிடைக்கிறது என்றால், மிஸ் செய்யாதீர்கள். விஜு மோன் திரையை மீறி அட்டகாசமாக சிரித்துக் கொண்டிருப்பதை உங்கள் தலைக்குள் கேட்கத் தயாராகுங்கள்.

Entertainment sub editor