இருவர் முதல் இன்று வரை.. இது முத்துப்பாண்டி கோட்டை.! பிரகாஷ்ராஜ் எனும் மகாநடிகன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா வரையிலும், மிக முக்கியமான நடிகராக இருப்பவர் பிரகாஷ் ராஜ். தனது நடிப்பால் பல உணர்வுகளை நமக்குள் கடத்தும் இந்த மாயாஜால நடிகர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இத்தனை வருடங்களாக தனது நடிப்பால் நம்மை அசத்திய இந்த மகாநடிகனை கொஞ்சம் நினைவு கூர்ந்து பார்க்கலாம் வாருங்கள்..!

பிரகாஷ் ராஜ் எனும் மகாநடிகன் | remembering prakash raj and his characters on his birthday

கர்நாடகாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, கன்னடத்தில் சிறு வேடங்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவருக்கு சரியான தொடக்கமாக அமைந்தது கே.பாலச்சந்தரின் டூயட். அதில் இவர் நடிப்பு முதல் முறையாக தமிழ் மக்களால் கவனிக்கப்பட்டது. இதற்கு பிறகு பிரகாஷ் ராஜை மேலும் பிரபலமாக்கியது மனிரத்னமின் இருவர். இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் காட்டிய நடிப்பு அவ்வளவு சாதரணமானதல்ல. அதுவும் தனது ஆரம்பக்கால நடிப்பில் இருக்கும் ஒரு நடிகனுக்கு, மிகப்பெரிய பேச்சாளரான ஒரு அரசியல்வாதியின் கதாபாத்திரம் என்பது எத்தனை சவாலானது. அதிலும் படத்தில் பல கவிதைகளையும், உணர்ச்சி பொங்கும் வசனங்களையும் பிரகாஷ் ராஜ் மிக நேர்த்தியாக கையாண்டிருப்பார். அப்போதே தான் ஒரு தேர்ந்த நடிகராக உருவெடுக்க போகிறோம் என அவர் விதை போட்டுவிட்டார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

அடுத்து பிரகாஷ்ராஜ் நடிப்பில் மிக முக்கியமான திரைப்படம் தெலுங்கில் உருவான அந்தபுரம். இதில் பிரகாஷ் ராஜ் வயதான ஒரு அப்பாவாக நடித்திருப்பார். வன்முறையும் கோபமும் கொண்ட ஒரு அசல் கிராமத்துவாசியாக அவர் திரையில் காட்டிய நடிப்பு அசுரத்தனமானது. அதுவே அவருக்கு இன்னுமொரு தேசிய விருதையும் அள்ளி வந்தது. அதே போல அஜித்தின் ஆசை படத்திலும் பிரகாஷ்ராஜ் தனது நடிப்பில் மிரட்டியிருப்பார். தனது மனைவியின் தங்கை மேல் ஆசைப்படும் அரக்கனை மிக கூலாக ஹேன்டில் செய்திருப்பார் பிரகாஷ்ராஜ். அப்பு படத்தில் பெண் வேடமிட்டு மகாராணியாக கலக்கினால், லிட்டில் ஜானில் கடுந்தவம் கொண்ட வில்லனாய் அசத்துவார். அதுதான் பிரகாஷ்ராஜின் ஸ்பெஷாலிட்டியே. இப்படி இருந்த பிரகாஷ்ராஜின் க்ராஃபை இன்னும் பீக்கில் போகச் செய்த படம்தான் கில்லி. முத்துப்பாண்டியிடம் இருந்து தனலட்சுமி காப்பற்றப்பட்டதற்கு ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷப்பட்டது. அந்தளக்கு தனது வில்லத்தனத்தால் மிரட்டினார் பிரகாஷ்ராஜ். இப்போதும் கூட பிரகாஷ்ராஜின் முகத்தை பார்த்தால், பின்னணியில் ஹாய் செல்லம் என அவரது கணீர் குரல் எழுந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் மூழ்கியிருப்பார் பிரகாஷ்ராஜ்.

வில்லன் என்பவன் படம் நெடுக ஏய்.. நான் யார் தெரியுமா என கத்திக்கொண்டு இருக்காமல், வேறு வெர்ஷனிலும் இருக்கலாம் என பிரகாஷ்ராஜ் காட்டியது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம். அத்திரைப்படத்தில் கமலுக்கு இணையான நடிப்பை பிரகாஷ் ராஜ் அலட்டல் இல்லாமல் செய்திருப்பார். குறிப்பாக இருவரின் காம்பினேஷனில் வரும் காட்சிகள் யாவும், நடிப்பின் உச்சம். என்னதான் படம் நெடுக சிரித்து சிரித்து கூல் செய்து கொண்டிருந்தாலும், க்ளைமாக்ஸில் தனது அசல் வில்லத்தனத்தை காட்டும் ஸ்டைல் தான் பிரகாஷ்ராஜின் தனித்துவம். தனது வில்லன் ஷேடை கொஞ்சம் குறைத்து, பிரகாஷ்ராஜ் செய்த படம்தான் அறிந்தும் அறியாமலும். கோபத்தையும் பாசத்தையும் ஒருசேர கொண்ட ஒரு அப்பாவாக தனது குணச்சித்திர நடிப்பில் கலக்கியிருப்பார் மனுஷன். அதே போலதான் அந்நியன் திரைப்படமும். இன்வெஸ்டிகேட்டிங் ஆபீசராக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார். குறிப்பாக தன் அண்ணன் இறந்த காட்சியில் அவர் காட்டியிருக்கும் Subtle-ஆன நடிப்பை எப்போது வேண்டுமானாலும் ரசிக்கலாம். சிவகாசி, பரமசிவன், போக்கிரி, திருவிளையாடல் ஆரம்பம் என ஒவ்வொரு படத்துக்கும் சம்பந்தமில்லாமல் வில்லத்தனம் காட்டி கலக்க பிரகாஷ்ராஜால் மட்டுமே முடியும்.

அவரால் சிங்கம் படத்திலும் நடிக்க முடியும், காஞ்சிவரத்திலும் நடிக்க முடியும். ஸ்ட்ரிக்ட் அப்பாவாக சந்தோஷ் சுப்பிரமணியத்திலும் அன்புள்ள டாடியாக அபியும் நானும் படத்திலும் நடிக்கும் மாயங்களை செய்ய, பிரகாஷ் ராஜுக்கு நிகர் அவர் மட்டுமே. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என சினிமா துறையில் கலக்கியவர், அதையும் தாண்டி இப்போது சமூக அரசியல், விவசாயம் என பயணித்து கொண்டிருக்கிறார். இந்த நாளில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துவதோடு.. இன்னும் நிறைய கதாபாத்திரங்களை அவர் நமக்கு தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் சார்..!

Entertainment sub editor