தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதை சொல்லியான விசு அவர்கள் நேற்று காலமானார். எழுத்து, இயக்கம், நடிப்பு என இயங்கி வந்த இந்த கலை சிற்பி, தனது 74 வயதில் மூச்சை நிறுத்தியிருக்கிறார். இப்போது வரை விசு என்று கூறினாலே, அவர் கணீர் குரல் நமது நினைவுக்குள் வருமளவு அவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்.? அதுகுறித்த ஒரு பார்வைதான் இது.
தமிழ் சினிமாவின் லெஜன்ட் இயக்குநரான கே.பாலச்சந்தரிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குநர். அப்பொழுதே ஒரு ரைட்டராக அவர் கே.பி படங்களில் ஜொலிக்க தொடங்கினார். குறிப்பாக தில்லுமுல்லு படத்தில் ரஜினி- தேங்காய் ஶ்ரீநிவாசன் இடையே நிகழும் உரையாடல்கள் அப்படி ரசிக்கும்படியாக இருக்கும். அதே போல ரஜினி நடித்த நெற்றிக்கண் திரைப்படமும் ஆல்டைம் ஃபேவரைட் ஆனதில் விசுவின் பங்கு உண்டு. கே.பாலச்சந்தரின் மேடை நாடகங்கள் பாணியை, அழகாக ஒரு குடும்பத்துக்குள் புகுத்தி, தனது வித்தியாசமான வசனங்களால் ஹிட் அடிக்க தொடங்கினார் விசு. வசனம் தான் எப்போதுமே விசுவின் பலமாக இருந்து வந்தது. மிகப்பெரிய காட்சியை கூட சின்ன வசனத்தால் மக்களுக்கு புரியும்படி சொல்லிவிடும் எழுத்தாளர் அவர். அதற்கு எடுத்துக்காட்டான படங்கள்தான் மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், டௌரி கல்யாணம் உள்ளிட்ட படங்கள். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவுக்கும் ரகுவரனுக்கும் நிகழும் அந்த வாக்குவாத காட்சி, தமிழ்சினிமாவில் காலத்தால் அழியாத காட்சியாக நிலைத்து நிற்கும். காரணம் விசுவின் வசனங்களில் ஒரு நாடகத்தன்மை இருக்கும். ஆனால் அது யதார்த்தத்திற்கு உட்பட்டு இருக்கும். அப்படியான வித்தைகளை தன் பேனா மூலம் செய்தவர்தான் விசு.
அதே போல விசுவிடம் இருக்கும் மற்றொரு ஸ்பெஷாலிட்டியே, அவரது கதாபாத்திர வடிவமைப்பு. 10-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஒரு திரைக்கதையை எழுத விசுவிற்கு நிகர் அவர் மட்டுமே. அதுவும் அவரின் அநேக படங்களில், ஏற்கனவே பயன்படுத்திய நடிகர்களையே நடிக்க வைப்பதுதான் விசுவின் வழக்கம். மனோரமா, தனது சகோதரர் கிஷ்மு, எஸ்.வி.சேகர், டெல்லி கனேஷ், திலிப், கமலா காமேஷ் இப்படி விசுவின் படங்களில் இவர்களை எப்போதுமே பார்க்கலாம். அதே போல உமா என்ற பெயரை தனது கதாபாத்திரத்துக்கு வைப்பதும் விசுவின் ட்ரேட்மார்க். ஒரு படைப்பாளிக்கு அவன் சொல்ல வரும் விஷயத்தை மிகக் குறைந்த செலவில் சொல்ல வேண்டும் எனும் நெருக்கடி ஏற்படும் போதே, அவன் கற்பனை திறன் மேலோங்கும் என சொல்வார்கள். அதுதான் விசுவின் படங்களிலும் நடந்தது. மிகப்பெரிய உணர்வை கூட ஒரு சிறிய ஷாட்டில் சொல்லிவிடும் அளவுக்கு அவரது கற்பனை திறன் வியக்கவைப்பது.
சினிமா எப்படி விசுவிற்கான அடையாளத்தை கொடுத்ததோ, அவரை தமிழகமென்ன, உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கும் பங்குண்டு. ஞாயிற்றுகிழமை ஆனாலே, விசுவின் அரட்டை அரங்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது ஒட்டுமொத்த தமிழர்களின் இல்லங்களிலும். அந்த நிகழ்ச்சியின் மூலம் பல ஊர்களை சேர்ந்த இளைஞர்களின் கோபத்தையும், கனவுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் மிகப்பெரிய விஷயத்தை செய்தார் விசு. கைக்குட்டையை தோளில் போட்டபடி, கையில் மைக்கோடு ஒலிக்கும் விசுவின் குரல் நமது காதுகளில் இருந்து அத்தனை சீக்கிரத்தில் அழிந்துவிடாது.
இப்படி தன் வாழ்நாள் முழுவதும் ஒப்பற்ற கலைஞனாக, மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்த இயக்குநரும் நடிகருமான விசு அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல். நீங்கள் மறைந்தாலும், உங்கள் கதாபாத்திரங்களின் வழியே எங்களுடன் எப்பொழுதும் வாழ்வீர்கள்... போய் வாருங்கள் விசு அவர்களே.