தனுஷின் 3 - காதலும் காதல் மட்டுமே..! இன்னும் மறையாத மேஜிக் எப்படி சாத்தியமானது.?!
முகப்பு > சினிமா செய்திகள்இந்த கொரோனா வந்ததும் வந்துச்சு, ஊரே வீட்டுக்குள் முடங்கி இருக்கிறது. புத்தகம் படிப்பது, அலமாரி துடைப்பது, கிச்சனுக்குள் இறங்கி வீரசாகசங்கள் புரிவது என அனைவருமே இதுவரை செய்யாத விஷயங்களில் மூழ்கி இருக்கின்றனர். இப்படியான நேரத்தில் நேரம் கிடைக்கும் போது, தனிமையில் அமர்ந்து யோசிக்கிறீர்களா. அதுவும் உங்கள் பள்ளியில் கண்ட அந்த காதலை யோசிக்கிறீர்கள். எந்த எதிர்ப்பார்ப்புமின்றி அன்பும் காதலும் மட்டுமே கொண்ட அந்த காலத்தை யோசிக்கிறீர்களா.? அப்போது சந்தேகமே வேண்டாம். நீங்கள் வண்டியில் ஏற வேண்டிய ரகம்தான். வாருங்கள் பள்ளிப்பருவத்தின் காதலை அசத்தலாக சொன்ன ''3'' படத்தின் 8 வருட நிறைவை கொண்டாடி கொண்டே, ஒரு ஃப்ளாஷ்பேக் சென்று வருவோம்.!
தனுஷ், ஷ்ருதி ஹாசன், பிரபு, ரோகினி, சிவகார்த்திகேயன் என இவர்களது நடிப்பில் 3 திரைப்படம் இதே நாளில் 8 வருடங்களுக்கு முன்பு வெளியானது. வருடங்கள்தான் ஓடிவிட்டது. ஆனாலும் 3 படத்தை இன்று பார்க்கும் போதும் அதன் க்ளாசிக் தன்மையும் ஃப்ரெஷ்னஸும் மாறாமல் இருக்கிறது. அதுதான் அத்திரைப்படத்தின் ஸ்பெஷாலிட்டியே. 3 படத்துக்கு முதல் அட்ரஸை எழுதியவர் அனிருத்தான். அவர் போட்ட கொலைவெறி பாடல் பட்டித்தொட்டி முதல் பாரின் வரை ஹிட் அடித்தது. அடுத்த வெளியான படத்தின் ஆல்பம், அப்போதைய இளசுகளுக்கு ஆல்டைம் ஃபேவரைட் ஆனது. அனைத்து பாடல்களும் இளசுகள் மத்தியில் ஹிட்டாக படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் எகிறியது. படமும் ரிலீஸ் ஆனது. படத்தின் முதல் பாதி வெகுவாக ரசிக்கப்பட்டாலும், இரண்டாம் பாதி ஒரு சிலருக்கும் திருப்தியை தரவில்லை. காரணம் அவர்கள் எதிர்ப்பார்த்த என்டர்டெய்ன்ட்மென்ட் குறைவாகி, படம் சற்றே ஆழமாக பயணிக்க தொடங்கும். ஆனால், அதுதான் 3 படத்தின் தனித்துவமே.
3 ஒரு படமாக மட்டுமே இருந்துவிடாமல், அது ஒரு நினைவாக மாறியதன் காரணம், படத்தில் இருந்து உண்மைத்தன்மை. 90-ஸ்களின் +2 மாணவர்களையும், அவர்களது காதலையும் 3 மிக மிக யதார்த்தமாக காண்பித்தது. ஆர்.எக்ஸ் 100 பைக் தொடங்கி, டியூஷன் க்ளாஸ் ரூம் வரை எல்லாமே நாம் பார்த்து அனுபவித்தவை. அதனால் தான் 3 பலரது மனதில் தனி ஃபேவரைட்டாக இருக்கிறது. 3 படத்தில் தனுஷுக்கும் ஷ்ருதிக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் என்பது மாறிப் போய், அது ராம் - ஜனனி வாழ்வில் நடக்கும் சம்பவங்களாக நம் மனதில் இன்னுமும் பதிந்திருக்கிறது என்பதே இத்திரைப்படத்தின் வெற்றி. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ராம் - ஜனனியின் முதல் பைக் பயணமாய், நமது பள்ளிப்பருவத்தின் நினைவுகளை மீட்டெடுக்க 3 படத்தால் மட்டுமே முடியும். அதே போல இத்திரைப்படத்தில் முக்கியமாக பேச வேண்டியது, நமது நடிப்பு அசுரன் தனுஷின் வேற லெவல் பர்ஃபார்மன்ஸ்.
ராம் கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்தார் என்று தனுஷை புகழ்ந்தால், அதைவிட சிறுமையான பாராட்டு இருக்காது. அப்படி அவர் செய்யும் எல்லா கதாபாத்திரங்களின் ஆழம் வரை சென்று நடிப்பவர் அவர். தனது நடிப்பை தாண்டி, முதல்பாதியில் தனுஷின் க்யூட்னஸ் தான் மிக கஷ்டமும் கூட. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என்று அவர் இன்டன்ஸான நடிப்பை செய்து பார்த்துவிட்டார். ஆனால் 3 திரைப்படத்தில் ஒரு பக்கத்துவிட்டு பையன் போல, அலட்டல் இல்லாத நடிப்பை நேர்த்தியாக கையாண்டிருப்பார் தனுஷ். அதுதான் அவரை இன்றளவும் பலதரப்பட்ட ஜானரில் பயணிக்க வைக்கிறது. காதலியை தேடி காத்திருப்பது, சட்டென காதலை சொல்வது, பயத்துடன் அவள் வீட்டினுள் செல்வது, அவளை தேடி திருப்பதி வரை செல்வது, என டீன் ஏஜ் பருவத்தின் இளைஞனாக தனுஷ், தனது துள்ளுவதோ இளமை காலத்தை திரும்பியும் திரையில் காட்டி கலக்கினார். அதே நேரம் இரண்டாம் பாதியில் மனநலம் பாதிக்கப்பட்டு முரடனாக நடந்து கொள்வதில் ஆகட்டும், தன் மனைவிக்கு தெரிய கூடாது என கலங்குவதில் ஆகட்டும், தனுஷின் நடிப்புக்கு கோடி முத்தங்கள் கொடுத்தாலும் பத்தாது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் மரணத்தின் விளிம்பில் போராடும் தனுஷின் நடிப்பு ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் புல்லரிப்பை ஏற்படுத்திவிடும்.
3 படத்தின் அடுத்த ஹீரோ அனிருத்தான். தனுஷின் நடிப்பில் காட்டிய உணர்வுகளை அனிருத் தன் கீபோர்ட்களில் காட்டினார். கொலைவெறி பாடலின் மூலம் உலக கவனத்தை அடைந்துவிட்டாலும், மற்ற பாடல்களை பொறுத்துதான் அவரை எடை போட முடியும் என சொன்னவர்களுக்கு, இத்திரைப்படத்தின் ஆல்பத்தை பதிலாக கொடுத்தார் அனிருத். காதலின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பாடலை போட்டு கொடுத்து, ஒரு பக்கா மியூசிக் டைரக்டர் என தன்னை 3 படத்தின் மூலம் அடையாளப்படுத்தி கொண்டார் அனிருத். பாடல்களை கடந்து 3 படத்துக்கு அனிருத் போட்ட பின்னணி இசை எப்போதுமே சிலிர்ப்பை ஏற்படுத்துபவை. அந்தளவுக்கு காட்சிகளுக்கு ஏற்ப, படம் முழுக்க தன் பின்னணி இசையை அமைத்திருப்பார் அனிருத். தனுஷும் அனிருத்தும் மிரட்டி கொண்டிருக்க, ஷ்ருதி, பிரபு, பானுப்பிரியா, சிவகார்த்திகேயன், சுந்தர், ரோகிணி என அனைவரும், ஒரு டோஸ் கூட அதிகமில்லாமல் சரியான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படி நேர்த்தியாக வேலை வாங்கிய ஐஸ்வர்யா தனுஷை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மூனு படத்தின் பெரிய விமர்சனமாக வைக்கப்படுவது அதன் இரண்டாம் பாதியும், க்ளைமாக்ஸும் தான். ராம் தனக்கு மனநிலை கோளாறு இருப்பது தெரிந்தவுடன், அதை ஜனனியிடம் சொல்லி இருக்கலாம், அப்படி சொல்லி இருந்தால் அவன் தற்கொலை தடுக்கப்பட்டிருக்கலாம். ஒரு சுபமான முடிவு கிடைத்திருக்கலாம். ஆனால், அந்த காதலும் அன்பும் ராமின் கோளாறை மறைக்கச் சொல்கிறது. தான் இறந்து போவதால் வரும் வலியை விட, இப்படி ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனுடன் வாழும் வலி கொடியது என ராம் நினைக்கிறான். உயிரோடு இருந்து அவளை கஷ்டப்படுத்துவதை விட, இல்லாமல் போவதே மேல் என அவன் நினைக்கிறான். அதனால் தற்கொலை எனும் முடிவை எடுக்கிறான். அவன் எடுத்த முடிவில் தவறு இருப்பினும், அவையனைத்தும் காதல் மற்றும் அன்பினால் ஏற்பட்ட உந்துதலினால் மட்டுமே. அதை ஆரம்பம் முதலே ராம், ஜனனி மீது வைத்திருக்கும் காதலையும் அன்பையும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதுதான் 3 படத்தின் மேல் மிகப்பெரிய வலியையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தனை வருடங்கள் கடந்தும் அதை நினைவுக்கூரப்படுகிறது. எந்தளவுக்கு இத்திரைப்படம் அதன் சந்தோஷங்களுக்காக கொண்டாடப்படுகிறதோ, அதே அளவுக்கு அது உணர்த்திய காதலின் வலிக்காகவும் கொண்டாடப்படும்.
எண்ணற்ற மெமரீஸ்களை, கனவுகளை, காதலை, வலியை, பிரிவை கொடுத்த இத்திரைப்படம் இந்த 8 வருடங்கள் அல்ல, இன்னும் 80 வருடங்களுக்கு நமது மனதில் அழியாமல் இருக்கும். நன்றி ஐஷ்வர்யா தனுஷ், தனுஷ், அனிருத் மற்றும் படக்குழுவினர்.