பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பிரபல அரசியல் கட்சி தலைவருக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், வளர்ந்து வரும் அரசியல் தலைவர் ஒருவர், தன்னையும், தனது பொதுநல சேவைகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும், அவர் அதை நிறுத்திவிட்ட நிலையில், அவரது தொண்டர்கள் தொடர்ந்து கீழ்த்தரமான முறையில் தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவிப்பது வருத்தமளிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு தான் செய்யும் சேவைகளையும், அவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்து குறிப்பிட்ட அரசியல் தலைவரின் தொண்டர்கள் தரக்குறைவாக பேசி, அவர்களின் மனதை புண்படுத்துவதாக லாரன்ஸ் பகிரங்கமான குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.
மேலும், அவரது பதிவில், எனக்கு எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்வேன். ஆனால், மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏதேனும் தொந்திரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனக்கு இந்த அரசியல் ஏதும் தெரியாது, அதில் நான் ஜீரோ. நடனம், இயக்கம், நடிப்பிலும் ஜீரோவாக இருந்த நான் பிறகு கற்றுக் கொண்டேன். இப்போது அரசியலிலும் ஜீரோவாக இருக்கும் என்னை, அதில் ஹீரோவாக்கி அரசியலில் இழுத்துவிடாதீர்கள்.
நீங்கள் அதிகம் பேசுவீர்கள், நான் சேவை அதிகம் செய்வேன். சொல்வதை விட செயலில் காட்டுகிறவர்களை தான் மக்களுக்கு அதிகம் பிடிக்கும். பொது மேடையில் இருவரும் அவரவர் செய்த சேவைகளை பட்டியலிட்டால் உங்களால் பதில் சொல்ல முடியாது. ஏழைகளுக்கும் தான் செய்யும் சேவையை ஆளும் கட்சி, எதிர்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள். இது தேர்தல் நேரம், எனது அறிக்கையால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தங்கள் பெயரை குறிப்பிடவில்லை.
இது பற்றி சமாதானமாக பேசவும், பிரச்னையை சவாலாக ஏற்கவும் தயார். முடிவை நீங்களே எடுங்கள் .. சாய்ஸ் யுவர்ஸ் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.