' நடிகர்கள் ரூ.100 கோடி வாங்குறாங்கனா....'' - திருப்பூர் சுப்ரமணியன் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்திருந்த படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்ஃபார்மான அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், ''இந்த முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியானால், 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படாது. திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும். பின்னர் தான் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாக வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே எனப்படும் ஜே.சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள செய்தி மகிழ்ச்சி. சிறப்பு வாழ்த்துகள் 2டி எண்டர்டெயின்மென்ட்டுக்கும், சூர்யா சாருக்கும். படம் தயாரிப்பும் ஒரு வியாபாரம். அதில் தொழில் சுதந்திரம் தேவை. எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது தயாரிப்பாளரின் முடிவே. நாங்கள் ஆதரிக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக திரையரங்க உரிமையாளரும் பிரபல விநியோகிஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாவது, ''திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளரின் கருத்து அவருடைய கருத்து அல்ல. திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கருத்து. சின்ன படங்களை திரையரங்குகள் வெளியிடவில்லை என்றும் அமேசான் வாங்கிவிட்டதாகவும் குறை கூறுகிறார்கள். அமேசான் பிரபல நடிகையின் படத்தைத் தான் வாங்கியிருக்கிறது. 

அந்த நடிகைக்கு பிரபலத்தன்மை எப்படி வந்தது. திரையரங்கம் மூலமாக தான் வந்தது. தியாகராஜ பாகவதர் முதல் இன்று நடிக்கும் நடிகர்களுக்கு பிரபலத்தன்மையும், ரசிகர் மன்றங்களும் திரையரங்கங்கள் மூலமாக தான் வந்தது. ஆனால் ஏறி வந்த ஏணியை அவர்கள் மறந்துவிட்டார்கள். ரூ.1 கோடி வாங்கிக்கொண்டிருந்த நடிகர்கள், ரூ.100 கோடி வாங்கிக்கொண்டிரருக்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியமாச்சு ? திரையரங்குகள் மூலமாகத் தான். இனி டிஜிட்டல் பிளாட்ஃபார்மகளில் குறைந்தபட்சம் 100 நாட்கள் கழித்து வரக்கூடிய படங்களை மட்டும் திரையரங்குகளில் திரையிட்டால் போதும்'' என்றார்.

Entertainment sub editor