“பேனருக்கு No.. No..ஆனா அதுக்கு பதிலா..!”- தளபதி ரசிகர்களின் புதிய முயற்சிக்கு காவல்துறை பாராட்டு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 22, 2019 03:57 PM
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் பேனருக்கு பதிலாக வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசையொட்டி, கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் திருநெல்வேலி காவல்துறையின் உதவியுடன் தளபதி ரசிகர்கள் சிசிடிவி கேமராக்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
தளபதி விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையரை அணுகி, காவல்துறையின் ஆலோசனையை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 CCTV மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்தனர். இதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “பெண்கள் பாதுகாப்பிற்காக CCTV அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. பெண் குழந்தைகள் எந்நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணை அழைக்கவும். நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர் ” என்று கூறியுள்ளார்.