தனி அதிகாரி நியமித்த குழுவுக்கு தடை - உயர்நீதிமன்றம் மறுப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி நியமித்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவுக்கு தடை கேட்டு வி‌ஷால் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.

Madras High court rejects actor and TFPC president Vishal's petition

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வகித்து வந்தனர்.

விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் மீது சங்க உறுப்பினர்கள் பல்வேறு குற்றசாட்டுகளை கூறி போர்க்கொடி தூக்கினார்கள். இதற்கிடையே விஷால் அணியின் பதவி காலம் கடந்த 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என்.சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

விஷால் அணி செயலாளரான எஸ்.கதிரேசன் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்ட விரோதமாகும். எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே தமிழக அரசு இயக்குனர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவை 2 நாட்களுக்கு முன்னர் நியமித்தது. இதற்கும் விஷால் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். தமிழக அரசு தரப்பில் இருந்து தரப்பட்ட இந்த குழு ஆலோசனை வழங்க மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று இந்த வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது தற்காலிகமாகவே. இந்த குழு தனிப்பட்ட முறையில் செயல்படக்கூடாது. நிர்வாக பிரச்சினையில் தலையீடு இருக்கக்கூடாது’. என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : Vishal