#11YearsofAyan : அயன் படத்தின் மூலம் சூர்யா எப்படி சூப்பர் மாஸ் ஆனார்.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை எடுத்துக்கொண்டால், அதில் சூர்யா நிச்சயம் இருப்பார். அப்படி தனக்காக திரைப்பயணத்தை பல போராட்டங்களோடும், வெற்றிகளோடும், தோல்விகளோடும் கடந்து வந்துருக்கிறார். அவரின் இந்த பயணத்தில் மிக முக்கியமானதாக கருதப்படும் அயன் திரைப்படம் இன்றோடு வெளியாகி 11 வருடங்கள் ஆகிறது. இந்த நாளில் சூர்யாவின் கெரியரில் அயன் படம் ஏற்படுத்திய தாக்கத்தை குறித்து பார்க்கலாம் வாங்க...!

சூர்யாவின் அயன் - ஒரு பார்வை | celeberating 11 years of suriya k.v.anand harris ayan

பொதுவாகவே தமிழ் சினிமாவில் சம்மர் ரிலீஸ் படங்களுக்கு தனி மவுசு உண்டு. பக்கா ஃபேமிலி என்டர்டெயினராக அந்த படம் அமைந்துவிட்டால் போதும், அந்த கோடை விடுமுறைக்கு அதுதான் மக்களின் சாய்ஸாக இருக்கும். படமும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். விஜய்யின் கில்லி, ரஜினியின் சந்திரமுகி உள்ளிட்ட படங்கள் எல்லாம் பக்கா கமர்ஷியல் மெட்டிரியலாக சம்மருக்கு வந்து சக்கை போடுப்போட்ட படங்கள். இதே பாணி தான் அயன் வெற்றிக்கும் காரணம். 2009 ஏப்ரல் 3-ஆம் தேதி, அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக அயன் படம் பக்கா கமர்ஷியலாக வெளியாக, படத்தை  அனைவரும் கொண்டாடினார்கள். அயன் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் சூர்யா. நந்தா, கஜினி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட டார்க்கான கதாபாத்திரங்களை செய்திருந்தாலும், பிதாமகன், சில்லுனு ஒரு காதல் என சூர்யாவின் துள்ளலான நடிப்பும் தினித்துவமானது. அதை அயனில் மிக அழகாக கையாண்டார் சூர்யா. அப்போதைய மாடர்ன் இளைஞர்களுக்கேற்ற கூலான காஸ்ட்யூம்ஸ், அப்பாசி பைக் என சூர்யா யூத்ஃபுல்லாக கலக்கினார். அயன் படத்திற்கு மஞ்சள் வண்ண அப்பாச்சி பைக் ட்ரென்ட் ஆனது எல்லாம் 90-ஸ் கிட்ஸ் வரலாறு. நடனம், காமெடி, காதல், பாசம், பழிவாங்கும் வெறி என ஒரு பக்கா என்டர்டெய்னராக சூர்யா முழுதாக அயனின் அசத்தினார். அப்போதே அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி மக்கள் கொண்டாடும் ஹீரோவாகிவிட்டார்.

அடுத்து ஹாரிஸ். போதுவாகவே சூர்யா - ஹாரிஸ் கூட்டணி இணைந்தால் மேஜிக்தான். அது அயனில் மட்டும் நடக்காமல் போகுமா என்ன..? ஒவ்வொரு பாடலையும் சார்ட் பஸ்டராக கொடுத்து, ஆல்பம் ஹிட் அடித்தார் ஹாரிஸ். அதிலும் டைட்டில் கார்ட் பாடல் எல்லாம் தரமான ஹாரிஸ் டச். குழந்தைகள், இளசுகள், பெருசுகள் என அனைவரையும் தனது பாடல்களால் ரசிக்க வைத்து, அயன் படத்திற்கு மேலும் வலு சேர்த்தார் ஹாரிஸ். அதே போல தமன்னா. அவர் அறிமுகமாகியிருந்த ஆரம்பக்காலங்களில், அயன் படம் அவரை கோலிவுட்டில் நிரந்திரமாக சேர் போட்டு அமர வைத்தது. சுமார் 10 வருடங்களை தாண்டி இன்னும் தமன்னா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவதில் அயன் படத்திற்கும் பங்குண்டு. மேலும் விஜய் டிவி ஜகன், வில்லன் கமலேஷ், பிரபு, கருணாஸ், வில்லனின் கணக்குபிள்ளை, நகை கடை முதலாளி வரை அத்தனை கதாபாத்திரங்களும் படத்திற்கேற்றவாறு நச்சென்று செதுக்கியது போல் அமைந்தது அயன் படத்தின் மற்றுமொரு சிறப்பு.

இப்படி எல்லோரையும் பாராட்டிவிட்டு, காரணகர்த்தா கே.வி.ஆனந்தை எப்படி விடுவது. ஆரம்பத்தில் பத்திரிக்கை துறையில் இருந்துவிட்டு பிறகு ஒளிப்பதிவாளரானவர். ஷங்கரின் சிவாஜியில் ஒளிப்பதிவு செய்துவிட்டு, ஷங்கர் படத்தின் தரத்தில் ஒரு படத்தை கொடுத்து தன் மீது இயக்குநர் முத்திரையை மிக ஆழமாக கே.வி.ஆனந்த் அயன் படத்தின் மூலம் பதிவு செய்தார். அயன் படம் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருப்பதன் காரணம், முற்றிலும் வேறு வகையில் ஒரு கமர்ஷியல் படத்தை கே.வி.ஆனந்த் சொல்லியிருப்பார். இப்போது போதை மருந்து, கடத்தல், மாஃபியா பற்றி பல படங்கள் வருகிறது. ஆனால் 2009 காலக்கட்டத்தில், அதை பற்றி மிக நுட்பமாகவும், அதே வேளையில் அது அனைவருக்கும் சென்று சேரும்படியும் அயன் படத்தை உருவாக்கியிருப்பார் கே.வி.ஆனந்த். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் போட்டு அவிழ்க்கும் பல படங்களின் ட்ரெண்டை அயன் படத்தின் மூலம் கே.வி பக்காவாக தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க வைரம், வயிற்றில் போதை மருந்து கடத்துதல், கடத்தல்காரர்கள் பேசும் முறை என அயன் படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து டீட்டெய்ல் செய்திருப்பார் கே.வி.ஆனந்த். அதுதான் இத்தனை வருடங்கள் கடந்தும் படத்தின் மீதான ஆச்சர்யத்தை குறையாமல் வைத்திருக்கிறது.

11 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது சூர்யா தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர். இங்கு மட்டுமின்று ஆந்திரா, கேரளாவிலும் மார்கெட் கொண்ட ஒரு நடிகராக உயர்ந்து இருக்கிறார். அயன் படம் எப்போதும் நினைவில் கொண்டாடப்பட்டு, அவரது பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும். இன்னும் இது போன்ற பக்கா ஜாலி என்டர்டெயின்ட்மென்ட் கமர்ஷியல் படங்களை சூர்யா கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரிஸ் மற்றும் படக்குழுவினர்.

Entertainment sub editor