தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவிருப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் மீண்டும் தனது குரு மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் நடிக்க பல முன்னணி பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், பெரிய பழுவேட்டறையர் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயராமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே, இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், படக்குழு தற்போது ஆரம்பக்கட்ட பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு நடிகர்கள் சிவானந்த் மற்றும் குமாரவேல் ஆகியோர் திரைக்கதை எழுதி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ‘பொன்னியன் செல்வன்’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.