20 வருடங்கள் கழித்தும் அலைபாயுதே பலரது All time favourite-டாக இருக்க இதுதான் காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு படம் ஒரு அலையாகத் தோன்றி ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்துவிடும். அலைகள் ஓய்வதில்லை தொடங்கி அலைபாயுதே-வில் தொடர்ந்து ஆரண்ய காண்டம் வரையில் இது விதிவிலக்கல்ல. இந்தப் படங்கள் எந்தக் காலகட்டத்துக்கும் பொருந்தும்வகையில் அமைந்திருப்பதுதான் இதன் சிறப்பு. மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 14, 2000-ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்துக்கு ஏப்ரல் 14, 2020-ம் ஆண்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் புது ரசிகர்களும் உண்டு, repeated audience என்று சொல்லக்கூடிய திரும்பத் திரும்ப பார்க்கும் சிலவகை ரசிகர்களும் உண்டு. அலைபாயுதே அன்றும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த காரணம் என்னவாக இருக்கும்?

மணிரத்னத்தின் அலைபாயுதே என்றென்றும்|20 yrs of Alai Payuthey

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள் ஷக்தி. (ஷாலினி) அக்குடும்பத்திலிருந்து அடுத்த கட்ட நகர்வை நோக்கி  மருத்துவம் படித்து வருபவள். இன்னொரு பக்கம் பணக்கார, எது குறித்தும் கவலைப்படாத ஜாலியான இளைஞன் கார்த்திக் (மாதவன்), இவர்கள் காதல் வயப்படுகிறார்கள். இந்த முரண்தான் இப்படத்தின் முதல் சுவாரஸ்யம். இவர்களின் காதல் கனிந்து ஒரு கட்டத்தில் ரகசியத் திருமணத்தில் முடிய, இருவரின் குடும்பம் உடைகிறது. இளம் கணவன் மனைவி இன்னும் வாழ்க்கையில் செட்டிலாகாத நிலையில், சில சிக்கல்களையும், ஈகோ பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

அவர்களின் அன்னியோன்யமான தாம்பத்யம் ஒரு கட்டத்தில் விலக நேரிட, பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான் கார்த்திக். அவனுடைய காதல் மனைவி ஷக்தி ஒருநாள் காணாமலாகிறாள். அவளை எப்படி கண்டுபிடிக்கிறான், அந்த தேடலின் அவள் மீதான ஆழமான காதலை எவ்வகையில் உணர்ந்து கொள்கிறான், எளிமையான வாழ்க்கையை ஏன் மனிதர்கள் பூதாகரமாக்கி தங்களை வதைத்துக் கொள்கிறார்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அவனுக்குத் தெளிவாகிறது. விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் ஷக்தி அதிலிருந்து மீண்டு அவனிடம் மீண்டு வருகிறாள். சுபம்.

மேலோட்டமாக பார்த்தால் இதுவொரு சாதாரண கதையாகத் தெரியலாம். ஆனால் இப்படத்தின் திரைக்கதையில்தான் எல்லா மேஜிக்கையும் புதைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இவரது மூன்று படங்களான மெளன ராகம், அலைபாயுதே, ஓ காதல் கண்மணி ஆகியவற்றை லவ் ட்ராலஜி என்று சொல்லலாம். அந்தந்த காலகட்டத்தில் சமூகத்தில் ஆண் பெண் உறவு, காதலன் காதலி மனநிலை, கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் எப்படி இருந்தன என்பதை மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளன இப்படங்கள். அதில் அலைபாயுதே வெளியான காலகட்டத்தில் அது உருவாக்கிய wave இளைஞர்களின் சுயம் சார்ந்தது. பெற்றோர்களின் கட்டுப்பாட்டில்  தங்கள் கனவுகளை புதைக்கும் இளசுகளின் விடுதலை கீதமாகியது. ஐடி என்ற துறை காலூன்றிய காலகட்டத்தை கவனமாகப் பிரதிபலித்த முதல் படம் அலைபாயுதே.

ஒவ்வொரு தடவையும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதாவது ஒரு புது விஷயம் தென்படும். அது ஒவ்வொருக்கும் மாறுபடும் என்றாலும், உதாரணமாக சொல்லப் போனால் ஷக்தியின் பிடிவாதத்தைச் சொல்லலாம். ஷக்தி தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவுடைய பெண். குடும்பம், பெற்றோர், அக்கா மீது பாசமும் பற்றமும் உடையவளாக இருந்தாலும், அவள் தன் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பவள். சரியான ஆண் மகனை அவள் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. படித்து முடித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசைப்படுகிறாள், ஆனால் அது நடக்கவில்லை. அவளது காதல் பெற்றோரால் எதிர்க்கப்படுகிறது. கார்த்திக் பதிவுத் திருமணம் பற்றி சொன்னபோது, அவளாலும் காத்திருக்க முடியாத சூழலில் ஒப்புக் கொள்கிறாள். 2000-ம் ஆண்டில் இது ஒரு துணிச்சலான முடிவு. இன்றும் கூட அது அப்படித்தான் உள்ளது என்றாலும், ஷக்தியின் பிடிவாதப் போக்கு அவளின் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள உதவுகிறது. வெளிநாடுகளில் திருமணம் என்பது இருவர் மனம் சார்ந்து பார்க்கப்படும் விஷயம். திருமணத்துக்கு முன்பே செக்ஸ் போன்ற விஷயங்களை கடந்துவிடும் அவர்கள், தொடர்ந்து பயணிக்க ஒரு துணையை தேடிக் கொள்வார்கள். ஆனால் நம்முடைய பாரம்பரியம் வேறானது. ஆழமான விஷயங்களை உள்ளடக்கியது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் பொறுப்பாளியாகவே பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால் மாறிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் பழைய விஷயங்களின் பலம் இது போன்ற பதிவுத் திருமணங்களால் தகர்க்கப்படுகிறது. ஏன் என்று கேள்வி கேட்கத் தொடங்கும் ஒரு தலைமுறையினர் உருவாகத் தொடங்கினார்கள். ''எனக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியும், நாங்க பாத்துக்கறோம், நீங்க கவலைப்படாதீங்க’’ என்று பெற்றோர்களுக்கு புரிய வைக்க அவர்களால் முடிகிறது. நான் என்ற உணர்வு இல்லாமல் குடும்பம் என்ற ஒரு கூட்டுக்குள் இருந்த மனிதன், நான் என்ற மிகை உணர்வால் அக்கூட்டை உடைக்கத் தொடங்குகிறான். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடுகள் இருப்பதில்லை. இந்த மாற்றத்தை அப்படியே காலத்தின் கண்ணாடியில் பதிய வைத்துவிட்டது அலைபாயுதே என்ற உயிரோட்டமான ஒரு உணர்வுச் சித்திரம்.

வாழ்க்கை பெரும் பயணம், அதில் காதல் என்பது ஒரு அத்யாயம் மட்டுமே. இளம் வயதில் மனங்களை அது ஊடுருவிச் செல்வதால் அதன் விளைவு அதீதமாகிறது. அதற்கான காரணம் ஹார்மோனோ ஹார்ட் ஸோனோ தெரியாது ஆனால் அதுதான் மானுடம் தழைக்க என்றென்றும் உதவுகிறது. அலைபாயுதே நம் மென் உணர்வுகளைத் தீண்டி, நம்மை விழிப்படையச் செய்கிறது. வாழ்க்கைக் குறித்த புரிதல்களை அடித்துச் சொல்லாமல் அணைத்துச் சொல்வதால் காலம் தாண்டி இன்றென்ன இன்னும் 2050 - ஆம் ஆண்டு வரையிலும் கூட சினிமாவை நேசிப்பவர்களால் பார்க்கப்பட்டு வரும் என்பது உண்மையிலும் உண்மை.

Entertainment sub editor