திருப்போரூர்-செங்கல்பட்டை இணைக்கும் 4 வழி சாலை அருகிலேயே, 200 அடியில் மலிவு சொகுசு அபார்ட்மெண்ட்களை சொந்தமாக வாங்கலாம் என்ற திட்டத்துக்கு ரஜினிகாந்தின் பாடல் வரியை டேக்லைன் ஆக்கி விளம்பரம் செய்தது மக்களிடையே கவனம் ஈர்த்தது.
சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான விஜய் ராஜா குழும நிறுவனத்தின் 8 லட்சத்துக்கு அபார்ட்மண்ட் வாங்கும் திட்டம் கடந்த பிப்.8ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் 20,000 ரூபாய் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை செலுத்தி 470 நாட்களுக்குள்ளாக தங்களது அபார்ட்மெண்ட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு பொருத்தமாக ‘8-க்குள்ள உலகம் இருக்கு ராமையா’ என்ற டேக்லைனை பயன்படுத்தி நடிகர் தம்பி ராமையா நடித்திருந்த விளம்பரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இதுவரை சிங்கிள் டிஜிட்டில் அபார்ட்மெண்ட் விலை என்று ஒன்று இருந்திராத நிலையில், மக்களை கவரும் விதமாக பயன்படுத்தப்பட்டிருந்த வித்தியாசமான டேக்லைன் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல் ‘8-க்குள்ள உலகம் இருக்கு ராமையா’. இந்த பாடல் வரியை தங்களது அனுமதியின்றி ரியல் எஸ்டேட் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸ் காப்புரிமை சட்டத்தின் கீழ் விஜய் ராஜா குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான சத்யா மூவீஸின் மனுவில், புதிதாக அறிமுகம் செய்த வீட்டு மனை வழங்கும் திட்டத்திற்கு, தங்களது தயாரிப்பில் வெளியான ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் வரும் ‘8-க்குள்ள உலகம் இருக்கு’ பாடலை சட்ட விரோதமாக விளம்பரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். எவ்வித அனுமதியின்றி சட்ட விரோதமாக பயன்படுத்திய பாட்ஷா பட பாடல் விளம்பரத்தை 15 நாட்களுக்குள் நிறுத்தவும், மீறினால் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விஜய் ராஜா நிறுவனத்திடம் கேட்டபோது, இது ஒரு விளம்பர நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட விளம்பரம் என்றும் இதில் யாருடைய காப்புரிமை மீறலும் இல்லை என்றும் சத்யா மூவீஸ் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.