'குழந்தைக்கு' செய்வினை வெச்சிருக்காங்க.. 'எடுத்தாகணும்!'.. 'என்ஜினியரிங் பட்டதாரிகள்' பார்த்த 'பலே' காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 10, 2019 11:15 PM

செய்வினை எடுத்து தருவதாகச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த 2 பேர் திருப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN engineers arrested for cheating in the name of blackmagic

திருப்பூரில் இயங்கி வரும் தனியார் பனியன் கம்பெனி ஒன்றின் எதிரில் வசித்து வருபவர் 35 வயதான மகேஸ்வரன். இரண்டு குழந்தைகளைக் கொண்ட இவர்களது வீட்டுக்கு 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். தங்களுக்கு மாந்திரிகம் மற்றும் ஜோதிடம் தெரியும் என்று சொல்லிக்கொண்ட அந்த இளைஞர்கள், மகேஸ்வரனிடம் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்துவிட்டதாகவும், அதனை உடனடியாக வழிபாடு மூலம் எடுத்தாக வேண்டியுள்ளதாகவும்  கூறியதோடு அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமுற்ற மகேஸ்வரன், போலீஸாருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இந்த 2 வாலிபர்களையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.  விசாரணையில் அவர்கள் 2 பேரும் தஞ்சையைச் சேர்ந்த 24 வயதான பாலாஜி மற்றும் 23 வயதான மகாபிரபு என்பதும் இருவரும் பொறியியல் படித்த பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது.

இருவரும் திருப்பூரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் போய் தங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்று அறிமுகப்படுத்திக்கொள்வதோடு, மக்களிடம் செய்வினை எடுக்கப்படும் என்று கூறி ஏமாற்றி பணம் பறித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : #ENGINEERS